பெட்டாலிங் ஜெயா, நவ 5 - ஸ்ரீ கெம்பாங்கானில் நிர்வாண நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண் கொலை வழக்கில், காவல்துறையினர் நான்காவது சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர்.
செர்டாங் மாவட்டக் காவல்துறையின் தலைமையகத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் மற்றும் அவர் இறந்தவரின் வீட்டுத் தோழி ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களில் பாதிக்கப்பட்ட பெண்ணின் முன்னாள் காதலரும் அடங்குவார் என்று செர்டாங் மாவட்டக் காவல்துறை தலைவர் முகமட் பாரிட் அகமட் தெரிவித்தார்.
மேலும் சில நபர்களைத் காவல்துறையினர் தேடி வருகின்ற நிலையில் இதுவரை எட்டு சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், மூன்று சந்தேக நபர்களின் தடுப்பு காவலை நீட்டிப்பதற்கு மனுத் தாக்கலும் செய்யப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் 29ஆம் தேதி அன்று, ஸ்ரீ கெம்பாங்கனிலுள்ள உள்ள ஜாலான் அங்கேரிக் பகுதியில் துர்நாற்றம் வீசுவதைத் தொடர்ந்து உயிரிழந்த பெண்ணின் உடல் பொதுமக்களால் கண்டெடுக்கப்பட்டது.




