ஷா ஆலம், ஏப்ரல் 28: 2023 முதல் கடந்த ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சிலாங்கூர் மாநிலத்தில் 16,242 பேர் உடல் உறுப்பு தானம் செய்ய உறுதிமொழி எடுத்துள்ளனர். இது நாடு தழுவிய மொத்த எண்ணிக்கையான 58,592-இல் 27 விழுக்காட்டைப் பிரதிபலிக்கிறது.
இந்த சாதனை மலேசியாவிலேயே அதிக உடல் உறுப்பு தான உறுதிமொழியாளர்களைக் கொண்ட மாநிலங்களில் ஒன்றாக சிலாங்கூரை நிலைநிறுத்துவதாகவும், இது மக்களிடையே அதிகரித்து வரும் விழிப்புணர்வைக் காட்டுவதாகவும் மாநில பொது சுகாதார ஆட்சிக் குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் கூறினார்.
மாநிலத்தின் மக்கள் தொகையில் உடல் உறுப்பு தானம் செய்ய உறுதிமொழி அளித்தவர்களின் விகிதம் 1.43 விழுக்காடாக உள்ளது. உறுப்பு தானம் மூலம் உயிர்களைக் காப்பாற்றும் முயற்சிக்கு மக்கள் அளிக்கும் ஆதரவை இது காட்டுகிறது என்றார் அவர்.
உடல் உறுப்பு தானம் மூலம் உயிர்களைக் காப்பாற்றும் முயற்சியில் சிலாங்கூர் மக்கள் கொண்டுள்ள உயர் அர்ப்பணிப்பு மற்றும் விழிப்புணர்வைப் பிரதிபலிக்கும் வகையில், இவ்விவகாரத்தில் சிலாங்கூர் தேசிய அளவில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது என்றும் அவர் கூறினார்.
"சிலாங்கூரில் உறுப்பு தான விகிதத்தை அதிகரிக்க, மலேசிய தேசிய சிறுநீரக அறக்கட்டளையுடன் (NKF) இணைந்து 'சிலாங்கூர் மாநில உறுப்பு தான விழிப்புணர்வு பிரச்சாரம்' போன்ற முயற்சிகளை மாநில அரசின் பொது சுகாதார நிலைக்குழு மேற்கொண்டுள்ளது."
"'ஓர் உறுதிமொழி, எட்டு நம்பிக்கைகள்' என்ற கருப்பொருளிலான இந்த விழிப்புணர்வு பிரச்சாரம், சமூகக் கல்வி, இணையவழி ஆதரவு மற்றும் உயர்கல்வி நிறுவன மாணவர்களின் தொடர்ச்சியான ஈடுபாடு ஆகியவற்றின் மூலம் உடல் உறுப்பு தான உறுதிமொழியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது."
"மேலும், சிலாங்கூர் இலவசச் சுகாதாரப் பரிசோதனை நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் கண்காட்சிகள், தகவல் கையேடுகள் விநியோகம் மற்றும் மைசெஜாதெரா செயலி மூலம் நேரடியாக உடல் உறுப்பு தானம் செய்ய பதிவு செய்தல் போன்ற விழிப்புணர்வு நடவடிக்கைகளும் இந்த பிரச்சாரத்தில் அடங்கும்," என்று அவர் இன்று சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில் தெரிவித்தார்.
2023 முதல் இன்று வரையிலான சிலாங்கூரில் உடல் உறுப்பு தான விகிதம் குறித்து பாலாக்கோங் சட்டமன்ற உறுப்பினர் ஓங் சுன் வெய் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.
ஜமாலியாவின் கூற்றுப்படி, மலேசியாவில் உடல் உறுப்பு தானம் மற்றும் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை முறையை வலுப்படுத்தும் தேசிய செயல்திட்டத்திற்கு சிலாங்கூர் மாநில சுகாதாரத் துறையும் (JKNS) உறுதுணையாக உள்ளது.
"புதிய உறுதிமொழியாளர்களின் எண்ணிக்கையில் சிலாங்கூர் தொடர்ந்து முதலிடத்தில் இருந்தாலும், உடல் உறுப்பு தான விகிதத்தை அதிகரிக்க சுகாதாரத் துறை எப்போதும் உத்திசார்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் அனைத்து பொறுப்பு மையத் தலைவர்களின் (PTJ) தீவிர பங்களிப்புடன் சிலாங்கூர் அளவிலான உறுப்பு மாற்று தொழில்நுட்பக் குழுவின் பங்கை வலுப்படுத்துவதும் அடங்கும்."
"மேலும், சேவையின் தரம் மற்றும் திறனை மேம்படுத்த, குறிப்பாக மருத்துவ உபகரணங்கள் வாங்குவதன் மூலம் உடல் உறுப்பு மாற்று சிறப்பு மையத்தை மேம்படுத்த அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது," என்றார் அவர்.








