பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 27 - நேற்று பெட்டாலிங் ஜெயாவில் நடைபெற்ற இலவச சுகாதாரப் பரிசோதனை முகாம், குறிப்பாக B40 சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்கு மிகுந்த பயனளித்துள்ளதாக அதில் பங்கேற்றவர்கள் மீடியா சிலாங்கூரிடம் பகிர்ந்துள்ளனர்.

இந்த முகாமில் இரத்த அழுத்த பரிசோதனை, பல் மற்றும் கண் பரிசோதனைகள், பெண்கள் சுகாதாரப் பரிசோதனைகள் (கர்ப்பப்பை வாய் புற்றுநோய் மற்றும் மார்பக புற்றுநோய் பரிசோதனை), நுரையீரல் புற்றுநோய் பரிசோதனை, மனநலம் தொடர்பான சோதனை என பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
மேலும், இரத்த தான முகாம் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான சுகாதார சேவைகள் ஒரே இடத்தில் இலவசமாக வழங்கப்பட்டதால் மக்கள் அதிக அளவில் இந்நிகழ்வில் பங்கேற்றனர். இந்த திட்டம், மக்கள் ஆரம்ப கட்டத்திலேயே பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளை கண்டறிந்து ஆரோக்கியமாக வாழ வழி செய்யும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

“இத்தகைய சுகாதார முகாம்கள் B40 மக்களுக்கு மிகவும் அவசியமானவை`` என இந்நிகழ்வில் கலந்த கொண்ட 59 வயதுடைய சாந்தி தெரிவித்தார். இந்த பரிசோதனகள் அனைத்தும் ஆரம்பத்திலேயே உடலில் இருக்கும் நோய்களை கண்டறிய உதவுகின்றன என அவர் மீடியா சிலாங்கூரிடம் பகிர்ந்து கொண்டார்.
தற்போது மலேசிய இந்தியர்களிடையே சுகாதார விழிப்புணர்வு அதிகரித்துள்ளது என்பது இங்கு வருகை புரிந்திருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கைப் பிரதிபலிக்கிறது என்றார் சாந்தி. இந்த திட்டத்தை ஏற்பாடு செய்தவர்களுக்கும் சிலாங்கூர் அரசுக்கும் தனது நன்றியைத் தெரிவித்து கொண்டார்.

அதனை தொடர்து, 54 வயதுடைய தூய்மை பணியாளரான ஈஸ்வரி, “இத்தகைய திட்டங்கள் மருத்துவப் பரிசோதனைக்கான செலவுகளைக் குறைக்க உதவுகின்றன என கூறினார். தற்போது மருத்துவ பரிசோதனைக்கும் போக்குவரத்திற்கும் செலவுகள் அதிகமாக உள்ளதால் இங்கு இலவசமாக பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் செய்யகொள்ள முடிகிறது என்றார் அவர்.
இந்த வாய்ப்பை மக்கள் குறிப்பாக B40 பிரிவைச் சேர்ந்த இந்திய சமூகத்தினர் கட்டாயம் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என அவர் கேட்டு கொண்டார். இது போன்ற திட்டங்கள் தொடர்ந்து நடைபெற வேண்டும்,” என தன்னுடைய எதிர்பார்ப்பையும் அவர் தெரிவித்தார்.

தனது குடும்பத்தினருடன் இந்த முகாமில் கலந்து கொண்ட 50 வயதுடைய வியாபாரியான பெரோஸ்தீன், “மருத்துவமனைகளில் இதுபோன்ற பரிசோதனைகளைச் செய்வது மிகவும் செலவாகும். ஆனால் இங்கு அனைத்தும் இலவசமாக கிடைக்கின்றன. சேவைகள் தரமாகவும் சீராகவும் உள்ளன, குறிப்பாக இந்திய சமூகத்தினர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஆரோக்கியத்தைப் பாதுகாக்க வேண்டும்,” என அவர் வலியுறுத்தினார்.
இந்த சுகாதார முகாம், குறைந்த வருமானம் கொண்ட சமூகங்களுக்கு மருத்துவ சேவைகளை எளிதாக அணுகக்கூடியதாக்கி, சுகாதார விழிப்புணர்வை மேலும் உயர்த்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்தகைய முயற்சிகள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.








