ஷா ஆலம், ஜன 28: ஜனவரி 13 அன்று பூச்சோங்கில் உள்ள உரிமம் பெறாத வளாகத்தில் மொத்தம் 160 பதிவு செய்யப்படாத மருத்துவ ஆக்ஸிஜன் இயந்திரங்களை மருத்துவ சாதன ஆணையம் (எம்டிஏ) பறிமுதல் செய்தது.
பயனர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய அபாயம் உள்ள அந்த மருத்துவ சாதனங்கள், சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டதற்கான ஆதாரங்கள் கண்டறியப் பட்டதையடுத்து, அந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பதிவு செய்யப்படாத மருத்துவ சாதனங்களை சந்தையில் கொண்டு வந்ததற்காக மருத்துவ சாதனங்கள் சட்டம் 2012 (சட்டம் 737), பிரிவு 5(1) இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது.
"குற்றம் நிரூபிக்கப்பட்டால், நிறுவனத்திற்கு RM200,000 க்கு மிகாமல் அபராதம் அல்லது ஆறு மாதங்கள் சிறை தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும்" என்று அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
பதிவு செய்யப்படாத அல்லது செல்லுபடியாகும் உரிமம் இன்றி மருத்துவ சாதனங்களுடன் தொடர்புடைய எந்தவொரு வணிக நடவடிக்கையையும் மேற்கொள்ள வேண்டாம் என்று எம்.டி.ஏ. அனைத்து தரப்பினரையும் எச்சரித்துள்ளது.
மேலும், எந்தவொரு கொள்முதலையும் மேற்கொள்ளும் முன், மருத்துவ சாதனங்களின் பதிவு நிலை மற்றும் வழங்குநர் நிறுவனங்களின் உரிமத்தை https://mdar.mda.gov.my/ என்ற இணைப்பின் மூலம் அல்லது எம்.டி.ஏ. போர்ட்டலை அணுகி சரி பார்க்குமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
“உடனடியாக அமலாக்க நடவடிக்கை எடுக்க, எந்தவொரு புகாரையும் https://www.femes.mda.gov.my/ என்ற இணைப்பின் வழியாக எம்.டி.ஏ.-க்கு சமர்ப்பிக்கலாம்,” என தெரிவிக்கப்பட்டது.


