ஷா ஆலம், நவ 18: இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் நவம்பர் 8 வரை, சிலாங்கூர் மாநிலத்தில் டிங்கி சம்பவங்கள் 36,001ஆக அல்லது 63.8 சதவீதம் குறைந்துள்ளது என்று மாநிலப் பொது சுகாதாரத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் தெரிவித்தார்.
இவ்வாண்டு இதுவரை 20,399 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் கடந்தாண்டு அதன் எண்ணிக்கை 56,400ஆகப் பதிவாகியிருந்தது. டிங்கியை தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் நோக்கில் மாநில அரசு மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மேற்கொண்ட இடையறாத முயற்சிகளின் பலனாக எண்ணிக்கையில் இந்த சரிவு ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
“டிங்கி தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்காக சிலாங்கூர் மாநிலம் RM4 மில்லியன் ஒதுக்கியுள்ளது. இதுபோன்ற பெரிய அளவிலான நிதி ஒதுக்கீட்டை மற்ற மாநிலங்கள் அரிதாகவே வழங்குகின்றன. அந்த தொகையில் RM2.7 மில்லியன் ஊராட்சி மன்றங்களுக்கு (PBT) சமூக அடிப்படையிலான செயல்பாடுகளை மேற்கொள்ள ஒதுக்கப்பட்டுள்ளது.
சிலாங்கூர் மாநில சட்டமன்ற (DNS) கூட்டத்தில், ஶ்ரீ செர்டாங் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அபாஸ் சலிமி அஸ்மி எழுப்பிய கூடுதல் கேள்விக்கு பதிலளிக்கும் போது ஜமாலியா இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், இந்த ஆண்டு டிங்கி காரணமாக ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை ஆறு மட்டுமே என அவர் விவரித்தார். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 14 மரணங்கள் பதிவானது குறிப்பிடத்தக்கது.
டிங்கி தடுப்பு மற்றும் தலையீட்டு முயற்சிகளை தொடர்வதற்கும் அவற்றை பயனுள்ளதாக வலுப்படுத்துவதற்கும் RM4 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக சிலாங்கூர் 2026 பட்ஜெட்டை சமர்ப்பிக்கும் போது, மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி அறிவித்தார்.




