சண்டாக்கான் தீ விபத்து: மாணவர்களுக்குத் தலா 300 ரிங்கிட் சிறப்பு உதவி – கல்வி அமைச்சு நடவடிக்கை

23 ஏப்ரல் 2026, 6:38 AM
சண்டாக்கான் தீ விபத்து: மாணவர்களுக்குத் தலா 300 ரிங்கிட் சிறப்பு உதவி – கல்வி அமைச்சு நடவடிக்கை

புத்ராஜெயா, ஏப்ரல் 23: சபா, சண்டாக்கான், கம்போங் பகியாவில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வித் தேவைகளை உடனடியாகப் பூர்த்தி செய்யும் வகையில், தலா 300 ரிங்கிட் சிறப்பு உதவித்தொகை அந்தந்தப் பள்ளிகளின் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடெக் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

பாதிக்கப்பட்ட மாணவர்கள் தங்களின் பள்ளி உபகரணங்கள் மற்றும் சீருடைகளை மீண்டும் கொள்முதல் செய்ய இந்தப் பணம் பயன்படுத்தப்படும் என்றும், பள்ளிகள் மூலமாக இந்த நிதி விநியோகம் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், உடைமைகளை இழந்த மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்கள் பள்ளிச் சீருடை அணிந்து வருவதிலிருந்து தற்காலிக விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

நிதியுதவி மட்டுமின்றி, மாணவர்களின் கல்வி தடைப்படாமல் இருக்கத் தேவையான போக்குவரத்து வசதிகளைச் செய்து தருமாறு சபா மாநிலக் கல்வித் துறைக்கும் சண்டாக்கான் மாவட்டக் கல்வி அலுவலகத்திற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்தோடு, விபத்தினால் மனரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளிப் பணியாளர்களுக்குத் தேவையான உளவியல் ஆலோசனைகளும் (Psychosocial support) வழங்கப்பட்டு வருகின்றன.

பாதிக்கப்பட்ட ஒவ்வொரு மாணவரின் நலனிலும் கல்வி அமைச்சு மிகுந்த அக்கறை கொண்டுள்ளதாகவும், அவர்களுக்கான சிறந்த உதவிகள் சென்றடைவதை அரசு உறுதி செய்யும் என்றும் ஃபட்லினா சிடெக் உறுதியளித்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, நான்கு ஹெக்டர் பரப்பளவிலான அந்த நீர்க்குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் சுமார் 1,000 வீடுகள் எரிந்து சாம்பலாகின. இச்சம்பவத்தை நேரில் பார்வையிட நேற்று சபா சென்றிருந்த பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், பாதிக்கப்பட்ட 12 பள்ளிகளைச் சேர்ந்த 454 மலேசிய மாணவர்களுக்குக் கல்வி அமைச்சின் மூலம் இந்தச் சிறப்பு நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.