சண்டாக்கான் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச ஆவண மாற்று, ரிம300 கல்வி உதவி

23 ஏப்ரல் 2026, 1:43 AM
சண்டாக்கான் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச ஆவண மாற்று, ரிம300 கல்வி உதவி

சண்டாக்கான், ஏப்ரல் 23: இங்குள்ள கம்போங் பஹாகியாவில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடையாள ஆவணங்களை இலவசமாக மாற்றுதல் மற்றும் ரிம300 கல்வி உதவித்தொகை வழங்கப்படும் எனப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று அறிவித்தார்.

ஆவணங்களை இழந்த பாதிக்கப்பட்டவர்களின் சிரமங்களைக் குறைக்கும் வகையில், தேசியப் பதிவுத் துறை (JPN) தனது 'மெக்கார்' (MEKAR) நடமாடும் சேவை மூலம் அழிந்துபோன ஆவணங்களை மாற்றுவதற்காக நேரடியாகக் கம்போங் பஹாகியாவிற்குச் செல்லும் என்று அவர் கூறினார்.

இந்த முன்முயற்சியின் மூலம், மைக்காட், மைகிட், பிறப்புச் சான்றிதழ்கள், இறப்புச் சான்றிதழ்கள், முஸ்லிம் அல்லாதோருக்கான திருமணச் சான்றிதழ்கள் மற்றும் குடிநுழைவுத் துறையால் வழங்கப்படும் கடவுச்சீட்டுகள் ஆகியவற்றை மாற்றுவதற்கான செலவை அரசாங்கம் முழுமையாக ஏற்கும்.

"கடவுச்சீட்டு, அடையாள அட்டை, பிறப்புச் சான்றிதழ், திருமணச் சான்றிதழ் என அனைத்தையும் இழந்துவிட்டனர். இது ஒரு பெரிய பிரச்சனை. நான் உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயிலுடன் கலந்துரையாடினேன். தேசியப் பதிவுத் துறை இங்கு வந்து பதிவு செய்யும்," என்று அவர் குறிப்பிட்டார்.

"பிறப்புச் சான்றிதழ்கள், மைகிட், மைக்காட், இறப்புச் சான்றிதழ்கள், மற்றும் முஸ்லிம் அல்லாதோருக்கான திருமணச் சான்றிதழ்களை நாங்கள் கட்டணமின்றி வழங்குவோம்," என்று தற்காலிக நிவாரண மையமான டேவான் புரோஜெக் பெருமாஹான் ராக்யாட் தாமான் பத்து சாப்பியில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்த பின்னர் அன்வார் செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்த சந்திப்பில் சபா முதல்வர் டத்தோஸ்ரீ ஹாஜிஜி நூர், கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக், பிரதமர் துறை அமைச்சர் (சபா மற்றும் சரவாக்) டத்தோ முஸ்தபா சக்முட் ஆகியோரும் உடனிருந்தனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, இந்த நீர்நிலைக் கிராமத்தில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில், நான்கு ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பளவில் சுமார் 1,000 வீடுகள் எரிந்து நாசமாகின.

இதற்கிடையில், தீ விபத்தால் பாதிக்கப்பட்ட 12 பள்ளிகளைச் சேர்ந்த 454 மலேசியக் குடியுரிமை பெற்ற மாணவர்களுக்குக் கல்வி அமைச்சகம் மூலம் ரிம300 உதவித்தொகை வழங்கப்படும் என்று அன்வார் கூறினார்.

"பள்ளிக்குச் செல்லும் ஒவ்வொரு மலேசியக் குழந்தைக்கும் நாங்கள் உதவுகிறோம். பள்ளிச் சீருடைகள், புத்தகங்கள் போன்றவற்றை உடனடியாக வாங்குவதற்காக ஒவ்வொரு மாணவருக்கும் ரிம300 வழங்கப்படும். அரசு சாரா நிறுவனங்களிடமிருந்து வேறு உதவிகள் வரலாம், ஆனால் கல்வித் தேவைகளை உடனடியாகப் பூர்த்தி செய்ய இந்த ரிம300 உதவும்."

"அதாவது, இப்பகுதியைச் சுற்றியுள்ள 12 பள்ளிகளைச் சேர்ந்த 454 மலேசியக் குடிமக்களின் குழந்தைகளுக்கு இந்த உதவி உடனடியாக வழங்கப்படும்," என்று அவர் கூறினார்.

இந்த பண உதவியைத் தவிர, மாணவர்களின் கற்றல் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, அவர்கள் தற்காலிகமாகப் பள்ளிச் சீருடை அணியாமல் பள்ளிக்கு வர அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அன்வார் அறிவித்தார்.

"இங்குள்ள பிள்ளைகளிடம் ஏன் பள்ளிக்குச் செல்லவில்லை என்று கேட்டேன், சீருடை இல்லை என்று பதிலளித்தார்கள். எனவே, சமூக நலத்துறை (JKM) புதிய சீருடைகளை ஏற்பாடு செய்யும் வரை, அவர்கள் சீருடை இல்லாமல் பள்ளிக்கு வர விலக்கு அளிக்கப்படுகிறது," என்றார் பிரதமர்.

மாணவர்கள் தொடர்ந்து பள்ளிக்குச் செல்வதை உறுதிசெய்ய, போக்குவரத்து உள்ளிட்ட தளவாட வசதிகள் வழங்கப்படும் என்றும் அன்வார் உறுதியளித்தார்.

-- பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.