பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 22 - பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மன்றத்தின் (எம்பிபிஜே) 149 ஊழியர்கள், சமூகத்திற்கு ஆற்றிய சிறந்த சேவை மற்றும் ஈடுபாட்டை அங்கீகரிக்கும் வகையில், 2025ஆம் ஆண்டிற்கான சிறந்த சேவை விருதைப் பெற்றனர்.
சஞ்சுங்கான் பூடி பிச்சாரா 2026 நிகழ்வில் 25 ஓய்வூதியதாரர்கள் கௌரவிக்கப்பட்டனர். மேலும், ஐந்து ஊழியர்களுக்கு மேயரின் சிறப்பு விருது வழங்கப்பட்டது.
மாநில அரசுச் செயலாளர் டத்தோ டாக்டர் அஹ்மட் ஃபட்லி அஹ்மட் தஜுடின், பெட்டாலிங் ஜெயா மேயர் டத்தோ முகமது ஜஹ்ரி சமிங்கோன் மற்றும் அவரது துணைத்தலைவர் அஸ்னான் ஹசன் ஆகியோர் விருதுகளை வழங்கினர். ஏப்ரல் 21, 2026 அன்று பெட்டாலிங் ஜெயா, அர்மாடா ஹோட்டலில் இந்த விழா நடைபெற்றது.
தனது உரையில், சிறந்த சேவைகளை வழங்குவதை உறுதிசெய்ய, எம்பிபிஜே ஊழியர்களிடையே நேர்மை மற்றும் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை அஹ்மட் ஃபட்லி வலியுறுத்தினார்.
“வழங்கப்பட்ட பணிகளை நேர்மையுடன் செய்யுங்கள்; புகார்கள் அல்லது பிரச்சனைகளைச் சரியான முறையில் தீர்க்கவும். மக்கள் தகவல்களைத் தேடும் சமூக ஊடகங்களை எப்போதும் புதுப்பித்து, அமைப்பு முறையைச் சீரமைக்க வேண்டும்,”
“பெறப்பட்ட இந்த விருது மன்றத்தின் பிரதிபலிப்பாகும். இந்த மாநகராட்சியின் சிறப்பானது குழுப்பணியின் விளைவாகும். ஒவ்வொருவரும் தத்தம் பங்களிப்பைச் சிறப்பாக ஆற்றி, தொடர்ந்து ஒத்துழைக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், சமூகத்தின் நலனைப் பாதுகாப்பதில் உள்ளூராட்சி மன்ற ஊழியர்களின் கடமை ஒரு பெரிய பொறுப்பு என்று முகமட் ஜஹ்ரி குறிப்பிட்டார்.
“நமக்கு வழங்கப்பட்ட கடமையும் பொறுப்பும் மிகப்பெரியது. மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்க களத்தில் இறங்க வேண்டும் என்ற சுல்தான் ஷாராஃபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜின் கட்டளையை நாம் மதிக்கிறோம்,”
“விருது பெற்றவர்கள் இதை ஒரு உந்து சக்தியாகக் கொண்டு தொடர்ந்து சிறப்பாகப் பணியாற்ற வேண்டும். இந்த ஆண்டு விருது பெறாதவர்கள் மனம் தளர வேண்டாம்,” என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
ஒவ்வொரு திட்டமும் நிர்ணயிக்கப்பட்ட கால அட்டவணை மற்றும் தரத்தின்படி செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்ய, ஒப்பந்ததாரர்களின் செயல்திறனை எம்பிபிஜே தொடர்ந்து கண்காணிக்கும் என்று அவர் மேலும் கூறினார்.
“ஒவ்வொரு திட்டத்திற்கும் நிலையான இயக்க நடைமுறைகள் (SOP) உள்ளன. ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், மேற்பார்வையாளர் உடனடியாகப் புகாரளிக்க வேண்டும். அப்போதுதான் நடவடிக்கை எடுக்க முடியும். இதன்மூலம் நேர்மைக்கு முன்னுரிமை அளிக்கப்படும்,”
“ஊழியர்களைப் பொறுத்தவரை, ஒழுங்கு நடவடிக்கைக் குழு மற்றும் நேர்மைப் பிரிவு உள்ளது. ஏதேனும் புகார்கள் வந்தால், நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு விசாரணை நடத்தப்படும்,” என்றார்.
முன்னதாக, விழாவில் கௌரவிக்கப்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கு அவர்களின் சேவை மற்றும் பங்களிப்பைப் பாராட்டும் வகையில் எம்பிபிஜே சிறப்பு ஊக்கத்தொகைகளை வழங்கியது.
முஸ்லிம்களுக்கு உம்ரா பயணப் பொதியும், முஸ்லிம் அல்லாதவர்களுக்கு அவரவர் மத வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்வதற்கான பயணப் பொதியும் வழங்கப்பட்டது. ஒவ்வொன்றும் தலா 8,000 ரிங்கிட் மதிப்புடையது.








