சபா, ஏப்ரல் 20 - சபா, சண்டாக்கானில் நிகழ்ந்த கோரத் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக இதுவரை ஆறு தற்காலிக நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இன்று காலை 8 மணி நிலவரப்படி 219 குடும்பங்களைச் சேர்ந்த 248 பேர் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து சபா மாநிலப் பேரிடர் மேலாண்மைக் குழுவின் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிபிஆர் பத்து சாப்பி மண்டபம், ஸ்கோலா கெபாங்சான் காஸ் மண்டபம், ஸ்கோலா கெபாங்சான் கம்போங் பஹாகியா மண்டபம், எஸ்எம்கே பத்து சாப்பி, சிபுகா மண்டபம் மற்றும் ஸ்கோலா கெபாங்சான் கரமுந்திங் ஆகிய இடங்களில் இந்த நிவாரண மையங்கள் செயல்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது சில மையங்களில் பாதிக்கப்பட்ட மக்களைப் பதிவு செய்யும் பணிகள் இன்னும் தீவிரமாக நடைபெற்று வருவதால், ஒட்டுமொத்தப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து மாற்றியமைக்கப்பட்டு வருவதாக அந்த அறிக்கை மேலும் குறிப்பிடுகிறது.
முன்னதாக, நேற்று சண்டாக்கான், கம்போங் பஹாகியா நீர் கிராமத்தில் ஏற்பட்ட இந்த மிகப் பெரும் தீ விபத்தில் சுமார் 1,000 வீடுகள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின.
இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த சண்டாக்கான் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தலைவர் ஜிம்மி லாகுங், சுமார் நான்கு ஹெக்டேர் பரப்பளவிலான குடியிருப்புப் பகுதிகள் இந்தத் தீ விபத்தில் பாதிக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தினார்.
மீட்புப் பணிகளும் நிவாரண உதவிகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.








