புத்ராஜெயா, ஏப்ரல் 16 : இணையத்தில் சிறார்களின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நடவடிக்கையாக, 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான சமூக ஊடகக் கணக்குகளுக்கான அணுகல் கட்டுப்பாட்டை அரசாங்கம் அமல்படுத்தவுள்ளது.
தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் கூறுகையில், இந்த அணுகல் கட்டுப்பாடு இறுதி ஆய்வுகளுக்குப் பிறகு, இந்த ஜூன் மாத இறுதியில் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
"தற்போது சமூக ஊடகத் தளங்கள் பயன்படுத்தும் வழிமுறைகளைக் கண்டறிய, மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (MCMC) அவற்றுடன் ஒரு 'ரெகுலேட்டரி சாண்ட்பாக்ஸ்' (சோதனைக்களம்) நடத்தி வருகிறது."
"இரண்டாவதாக, நாம் எதிர்பார்க்கும் வழிமுறைகளைத் தரப்படுத்துவதாகும். இது வெறும் 'ஏஜ் அஷூரன்ஸ்' (வயது உறுதி) ஆக இல்லாமல், 'ஏஜ் வெரிஃபிகேஷன்' (வயது சரிபார்ப்பு) ஆக இருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.
ஏனெனில், மலேசியாவின் சட்டச் சூழல் வேறுபட்டது, இங்கு அதிகாரப்பூர்வ அரசாங்க ஆவணமான மைக்காட் நம்மிடம் உள்ளது," என்று அவர் தொடர்புத் துறை அமைச்சின் மாதாந்திரக் கூட்டத்தில் கலந்துகொண்ட பிறகு கூறினார்.
இந்நிகழ்ச்சியில், தொடர்புத் துறை துணை அமைச்சர் தியோ நீ சிங், அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ அப்துல் ஹலிம் ஹம்சா மற்றும் பெர்னாமா தலைமைச் செயல்முறை அதிகாரி டத்தின் படுக்கா நூர்-உல் அஃபிடா கமாலுடின் ஆகியோரும் உடனிருந்தனர்.
இந்தக் கட்டுப்பாட்டை அமல்படுத்துவது குறித்து கடந்த வெள்ளிக்கிழமை சிங்கப்பூரில் சமூக ஊடகத் தளங்களுடன் எம்.சி.எம்.சி ஆழமான விவாதங்களை நடத்தியதாக ஃபஹ்மி கூறினார்.
"தற்போது ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அவர்கள் (எம்.சி.எம்.சி) அடுத்த வாரத்திற்குள் என் கவனத்திற்குக் கொண்டு வருவார்கள். அதன்பிறகு, ஒரு முடிவை எடுப்போம். இந்தத் தடையை ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் செயல்படுத்த முடியும் என நம்புகிறோம்," என்றார்.
பல சமூக ஊடகத் தளங்கள் இந்தக் கட்டுப்பாட்டைச் செயல்படுத்தத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளன என்றும், இறுதி முடிவு எடுப்பதற்கு முன்னர், மேல் கலந்துரையாடல்களின் முடிவுகள் விரைவில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
அடையாளம் மற்றும் வயது சரிபார்ப்பிற்கான கூடுதல் பாதுகாப்புக் கூறாக மைக்காட் தொடர்பான குறிப்பிட்ட சட்டத்தை மலேசியா பயன்படுத்தும் என்பதால், ஆஸ்திரேலியாவில் பயன்படுத்தப்படும் 'ஏஜ் அஷூரன்ஸ்' மாதிரியிலிருந்து மலேசியாவின் அணுகுமுறை வேறுபடுகிறது என்று ஃபஹ்மி முன்னதாகக் கூறியிருந்தார்.
இளைஞர்களிடையே சமூக ஊடகத் தளங்களின் எதிர்மறையான தாக்கங்கள் காரணமாக, ஆஸ்திரேலியா கடந்த ஆண்டு 16 வயதுக்குட்பட்ட பயனர்களைத் தடை செய்ததைத் தொடர்ந்து, சிறார்களுக்கான சமூக ஊடக அணுகல் கட்டுப்பாடு உலகம் முழுவதும் பரவி வருகிறது.
ஆஸ்திரேலியா 16 வயதுக்குட்பட்ட பயனர்களுக்கு சமூக ஊடகத் தளங்களுக்கான அணுகலைத் தடைசெய்யும் சட்டத்தை டிசம்பர் 10 முதல் அமல்படுத்தியது.








