காதல் மோசடியில் சிக்கிய முதியவர் 1.17 மில்லியன் ரிங்கிட்டை இழந்தார்

16 ஏப்ரல் 2026, 6:33 AM
காதல் மோசடியில் சிக்கிய முதியவர் 1.17 மில்லியன் ரிங்கிட்டை இழந்தார்

கூச்சிங், ஏப்ரல் 16 - சமூக வலைத்தளங்கள் வாயிலாக 'காதல் மோசடி' (Love Scam) வலைக்குள் சிக்கி, மிரியைச் சேர்ந்த 64 வயது முதியவர் ஒருவர் சுமார் 1.17 மில்லியன் ரிங்கிட் பணத்தை இழந்துள்ளார்.

இது குறித்து நேற்று பெறப்பட்ட புகாரைத் தொடர்ந்து, மிரி மாவட்டக் காவல்துறைத் தலைவர் ஏசிபி முகமட் ஃபர்ஹான் லீ அப்துல்லா விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட முதியவருக்கு முதலில் 'டிக்டாக்' (TikTok) செயலி வழியாக மர்ம நபர் ஒருவரின் அறிமுகம் கிடைத்துள்ளது. பின்னர் அந்த நட்பு 'வாட்ஸ்அப்' (WhatsApp) செயலிக்கு மாற்றப்பட்டு, நெருக்கமான உரையாடலாகத் தொடர்ந்துள்ளது.

விசாரணையில், சம்பந்தப்பட்ட மோசடி பேர்வழி ஒரு வெளிநாட்டவரைப் போலத் தன்னைச் சித்தரித்துக் கொண்டதும், முதியவரை நம்ப வைப்பதற்காக மற்றொரு நபரின் புகைப்படத்தையும், போலியாகத் திருத்தப்பட்ட ஆவணங்களையும் பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.

தான் ஒரு பெரிய எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வாராய்ச்சித் திட்டத்தை (Cari gali) முன்னெடுத்து வருவதாகவும், ஆனால் தற்போது தனது வங்கிச் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாகவோ அல்லது முடக்கப்படும் அபாயத்தில் உள்ளதாகவோ கூறி அந்த நபர் முதியவரிடம் நாடகமாடியுள்ளார்.

திட்டத்திற்கான முன்பணம் மற்றும் இதர செலவுகளுக்காக அவசரமாகப் பணம் தேவைப்படுவதாகவும், அதனைப் பின்னர் அமெரிக்க டாலராக (USD) திருப்பித் தருவதாகவும் ஆசை வார்த்தைகளைக் கூறி முதியவரை நம்ப வைத்துள்ளார்.

மோசடி நபரின் இனிமையான பேச்சில் மயங்கிய அந்த முதியவர், சந்தேகத்திற்கு இடமின்றி அந்த நபர் வழங்கிய ஒன்பது வெவ்வேறு வங்கிச் கணக்குகளுக்கு மொத்தம் 59 முறை பணப் பரிமாற்றம் செய்துள்ளார். இவ்வாறு அவர் இழந்த மொத்தத் தொகை 1,173,700 ரிங்கிட் ஆகும்.

இந்த விவகாரத்தைத் தனது குடும்பத்தினரிடம் பகிர்ந்து கொண்ட பின்னரே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முதியவர், உடனடியாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தற்போது இச்சம்பவம் குறித்து குற்றவியல் சட்டத்தின் 420-ஆவது பிரிவின் கீழ் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.