ஷா ஆலம், ஏப்ரல் 16 - இந்த ஆண்டிற்கான சிலாங்கூர் மாநில பள்ளி உதவித் திட்டத்தின் கீழ், ரவாங் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பள்ளிகளுக்கான விண்ணப்பங்கள் நேற்று முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் மே மாதம் 15-ஆம் தேதி வரை நீடிக்கும் இந்த விண்ணப்ப செயல்முறை குறித்து ரவாங் சட்டமன்ற உறுப்பினர் சுவா வெய் கியாட் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்தத் திட்டமானது முதன்மையாகப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளைச் சீரமைத்தல் மற்றும் மேம்படுத்துதல் ஆகிய பணிகளை மையமாகக் கொண்டுள்ளது.
இது குறித்துத் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள சுவா வெய் கியாட், தகுதியுள்ள பள்ளிகள் அனைத்தும் https://akses.selangor.gov.my/ எனும் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.
கூடுதல் விவரங்கள் அல்லது விண்ணப்பம் தொடர்பான சந்தேகங்களுக்கு bantuansekolah@selangor.gov.my என்ற மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது 03-5521 2595, 03-5544 7538 மற்றும் 03-5521 2561 ஆகிய எண்களிலோ தொடர்பு கொள்ளலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரவாங் சட்டமன்றத் தொகுதியில் உள்ள பள்ளிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதன் மூலம், மாணவர்களின் கற்றல் தரத்தை உயர்த்துவதே இந்த முன்னெடுப்பின் முக்கிய நோக்கமாகும்.
கடந்த ஆண்டில் மட்டும் சிலாங்கூர் மாநில அரசு இத்திட்டத்திற்காக 26.624 மில்லியன் ரிங்கிட் நிதியை ஒதுக்கியிருந்தது. இதன் மூலம் மக்கள் சமயப் பள்ளிகள் உள்ளிட்ட ஏழு வெவ்வேறு பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 873 பள்ளிகள் பயன்பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டும் அதே போன்றதொரு ஆக்கப்பூர்வமான மாற்றத்தை ரவாங் தொகுதி பள்ளிகளில் ஏற்படுத்த தாம் முனைப்புடன் இருப்பதாகச் சட்டமன்ற உறுப்பினர் சுவா வெய் கியாட் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.








