ஷா ஆலாம், ஜூலை 12 - ரவாங்கில் , வழிபாட்டுப் பொருட்களைத் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்டத் தீயில், அத்தொழிற்சாலை பெரும் சேதமடைந்தது.
இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் இந்த விபத்து நிகழ்ந்தது.
ரவாங் தொழிற்துறைப் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது குறித்து மதியம் மணி 1:01-க்கு அவசர அழைப்பு வந்தது என சிலாங்கூர் தீயணைப்பு - மீட்புத்துறையின் நடவடிக்கைப் பிரிவின் உதவி இயக்குனர் அஷ்ருல் ரிசால் அஸ்பார் தெரிவித்தார்.
ரவாங் தீயணைப்பு மீட்பு நிலையத்திலிருந்து முதல் தீயணைப்பு வாகனம் மதியம் 1:07 மணிக்கு சம்பவ இடத்தை வந்தடைந்தது.
மேலும், ரவாங், பத்து ஆராங், புக்கிட் செந்தோசா, செலாயாங் மற்றும் டாமன்சாரா தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த மொத்தம் 20 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
தீயணைப்புப் பணிகளைத் தொடங்கிய 35 நிமிடங்களுக்குள் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர தீயணைப்பு வீரர்கள் முற்பட்டனர்.
இந்த தீயில் தொழிற்சாலையின் சுமார் 80 % விழுக்காடு பகுதி பாதிக்கப்பட்டது என்று அறிக்கையின் வாயிலாக அஷ்ருல் தெரிவித்தார்.
இதில் காயங்கள் அல்லது உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.







