டீசல் மானிய உதவிதொகை RM400ஆக உயர்வு - அரசாங்கம்

15 ஏப்ரல் 2026, 3:49 AM
டீசல் மானிய உதவிதொகை RM400ஆக உயர்வு  - அரசாங்கம்

ஷா ஆலம், ஏப்ரல் 15 – நாட்டின் தற்போதைய பொருளாதாரச் சூழலைக் கருத்தில் கொண்டு, டீசல் மானியத்திற்கான ரொக்க உதவித் தொகையை அரசாங்கம் உயர்த்தியுள்ளது.

இதன்படி, 'பூடி அக்ரி-கொமோடிட்டி' (BUDI Agri-Komoditi) மற்றும் 'பூடி டீசல் தனிநபர்' (BUDI Diesel Individu) திட்டங்களின் கீழ் வழங்கப்பட்டு வந்த மாதந்திர உதவித் தொகை, இந்த ஏப்ரல் மாதத்தில் RM300-லிருந்து RM400 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த கூடுதல் நிதி உதவியானது எதிர்வரும் ஏப்ரல் 21-ஆம் தேதி பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்படும். இந்த உயர்வினால் 'பூடி அக்ரி-கொமோடிட்டி' திட்டத்தின் கீழ் சுமார் 200,000-க்கும் மேற்பட்ட விவசாயிகளும் சிறுதோட்ட உரிமையாளர்களும் பயனடைவார்கள்.

இதற்காக அரசாங்கம் மாதம் ஒன்றுக்கு கூடுதலாக 20 மில்லியன் ரிங்கிட் நிதியை ஒதுக்கியுள்ளது. அதேவேளையில், தீபகற்ப மலேசியாவில் வசிக்கும் சுமார் 150,000 டீசல் வாகன உரிமையாளர்கள் 'பூடி டீசல் தனிநபர்' திட்டத்தின் மூலம் பயன்பெறுவர்; இதற்காக 15 மில்லியன் ரிங்கிட் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

விவசாயத் துறையை மேலும் ஊக்குவிக்கும் வகையில், நெற்பயிர் நிலங்களை உழுவதற்கான ஊக்கத்தொகையும் (IPKP) ஒரு ஹெக்டேருக்கு RM160-லிருந்து RM300 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான பயிர்ச் சாகுபடி பருவத்தைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவினால், ஏறக்குறைய 200,000 நெற்பயிர் விவசாயிகள் பலனடைவார்கள். இதற்காக அரசாங்கம் சுமார் 40 மில்லியன் ரிங்கிட் கூடுதல் நிதியைச் செலவிடவுள்ளது.

கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு ஹெக்டேருக்கு RM50 மதிப்பிலான அறுவடை ஊக்கத்தொகையும் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என நிதியமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.

இவற்றுடன், டீசல் கொள்முதல் நடைமுறைகளிலும் அரசாங்கம் சில தளர்வுகளை அறிவித்துள்ளது. வாகனங்கள் தவிர்த்த பிற பயன்பாடுகளுக்காகக், குறிப்பாக விவசாய இயந்திரங்களுக்காக 20 லிட்டருக்கு மேல் டீசல் வாங்குவதற்கு விதிக்கப்பட்டிருந்த கடுமையான நிபந்தனைகள் தளர்த்தப்பட்டுள்ளன.

இனி விவசாய இயந்திர உரிமையாளர்கள் தங்களது இயந்திரப் பதிவுச் சான்றிதழைக் காண்பித்து தடையின்றி டீசலைப் பெற்றுக்கொள்ளலாம்.

ஒட்டுமொத்தமாக, ஏப்ரல் 2026 மாதத்திற்கான மானியச் சுமைகளுக்காக அரசாங்கம் சுமார் 7 பில்லியன் ரிங்கிட் செலவிடவுள்ள நிலையில், அதில் இந்த புதிய டீசல் உதவித் திட்டங்களுக்கான 75 மில்லியன் ரிங்கிட் கூடுதல் நிதியும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.