எரிசக்தி நெருக்கடி: மக்களைப் பாதுகாக்கத் தீவிர நடவடிக்கைகளைப் பிரதமர் அன்வார் அறிவித்தார்

15 ஏப்ரல் 2026, 3:21 AM
எரிசக்தி நெருக்கடி: மக்களைப் பாதுகாக்கத் தீவிர நடவடிக்கைகளைப் பிரதமர் அன்வார் அறிவித்தார்

கோலாலம்பூர், ஏப்ரல் 15 – உலகளவில் தீவிரமடைந்து வரும் எரிசக்தி நெருக்கடியைச் சமாளிப்பதற்கும், அதன் தாக்கம் மலேசிய மக்களைப் பாதிக்காமல் இருப்பதை உறுதி செய்யவும் தேசிய பொருளாதார நடவடிக்கை மன்றம் (MTEN) தெளிவான வழிகாட்டுதல்களை வகுத்துள்ளதாகப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

பெட்ரோனாஸ் (PETRONAS) நிறுவனத்தின் முக்கிய பங்களிப்புடன், வரும் காலங்களில் எரிசக்தி மற்றும் அடிப்படைப் பொருட்களின் விநியோகம் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருள் விலை உயர்வின் சுமையைக் குறைக்கும் வகையில், நெற்பயிர் விவசாயிகள், சிறுதோட்ட உரிமையாளர்கள் மற்றும் தனிநபர் வாகன உரிமையாளர்களுக்குக் கூடுதல் டீசல் மானிய உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகப் பிரதமர் தெரிவித்தார்.

இது குறித்துத் தனது 'எக்ஸ்' (X) தளத்தில் பதிவிட்டுள்ள அவர், அரசாங்கத்தின் முக்கிய நோக்கம் மக்களின் நலனைப் பாதுகாப்பதே என்றும், அதே வேளையில் பொருளாதார ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து யதார்த்தமான முடிவுகளை எடுப்பதில் அரசு உறுதியாக இருப்பதாகவும் வலியுறுத்தினார்.

எரிசக்தி பயன்பாட்டைச் சீரமைக்கும் நோக்கில், இன்று முதல் அரசு ஊழியர்களுக்கு 'வீட்டிலிருந்து வேலை' (WFH) செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் எரிசக்தி தேவையைக் கட்டுப்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நாட்டின் எரிபொருள் விநியோகத்தைப் பாதிக்கும் கடத்தல் மற்றும் சட்டவிரோதக் கசிவுகளைத் தடுக்க 'ஒப்ஸ் தீரிஸ்' (Ops Tiris) நடவடிக்கை மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

நீண்டகாலத் தீர்வாக, இறக்குமதி செய்யப்படும் எரிபொருட்களின் மீதான சார்புநிலையைக் குறைக்க, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களுக்கு மாறுவதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

தற்போதைய சூழலில், 'பயோடீசல்' (Biodiesel) பயன்பாடு ஒரு நடைமுறைச் தீர்வாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இதற்கேற்ப, தற்போதுள்ள உள்கட்டமைப்புகளைப் பயன்படுத்தி பயோடீசல் கலப்பு விகிதத்தை படிப்படியாக 'பி15' (B15) நிலைக்கு உயர்த்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மூலம் நாட்டின் எரிசக்தித் துறை வலுப்படுத்தப்படுவதோடு, உலகளாவிய நிச்சயமற்ற சூழலிலும் மலேசிய மக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் எனப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் நம்பிக்கை தெரிவித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.