கோலாலம்பூர், ஏப்ரல் 14: நாட்டின் மருந்து தேவைகளும் விநியோகமும் இந்த ஆண்டு ஜூன் மாத இறுதி வரை சீராக இருக்கும் என்பதால், பொதுமக்கள் நீண்ட கால சேமிப்பிற்காக பதற்றத்துடன் மருந்துகளை வாங்குவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சுகாதார அமைச்சின் (KKM) மருந்தியல் நடைமுறை மற்றும் மேம்பாட்டுப் பிரிவின், மருந்து விநியோக மேலாண்மைக் கிளையின் மூத்த உதவி இயக்குநர் முஹம்மது மட் ஸின், அரசாங்க சுகாதார மையங்களில் உள்ள மருந்து கையிருப்பு தொடர்ந்து கண்காணிக்கப் பட்டு வருவதாகவும், நோயாளிகளுக்கான விநியோகத்தில் எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதாகவும் கூறினார்.
"பொதுமக்கள் அதிகப்படியான மருந்துகளை வாங்கிச் சேமிக்கக் கூடாது, ஏனெனில் மருந்துகளுக்குக் காலாவதி தேதி உண்டு. மேலும், அவை பொருத்தமான வெப்பநிலையில் சேமிக்கப்பட வேண்டும். அளவுக்கு அதிகமான கையிருப்பு, சேதமடைந்த அல்லது காலாவதியான மருந்துகளைப் பயன்படுத்தும் அபாயத்தை அதிகரித்து, உடல் நலத்திற்குத் தீங்கு விளைவிக்கும்."
"எனவே, கையிருப்புகளை புத்திசாலித்தனமாக நிர்வகிப்பது, மொத்தமாக வாங்குவதைத் தவிர்ப்பது, மற்றும் மருத்துவர்கள் அல்லது மருந்தாளுநர்கள் போன்ற சுகாதார நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுவது மிகவும் முக்கியம்," என்று அவர் கூறினார்.
உலகளாவிய எரிசக்தி நெருக்கடியைத் தொடர்ந்து உள்நாட்டு மருந்து சந்தையில் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து விவாதிப்பதற்காக, இன்று பெர்னாமா தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்ட 'அப்பா கபார் மலேசியா' நிகழ்ச்சியில் விருந்தினராகக் கலந்து கொண்டபோது அவர் இவ்வாறு கூறினார்.
உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற நாள்பட்ட நோய்களால் பாதிக்கப் பட்டவர்கள், தன்னிச்சையாக தங்களின் தினசரி மருந்துத் தேவைகளைக் குறைத்துக் கொள்ள வேண்டாம் என்றும் முஹம்மது அறிவுறுத்தினார்.
"நாள்பட்ட நோய்களைக் கொண்டவர்கள் மருந்து விஷயத்தில் சிக்கனமாக இருக்க முடியாது. மருத்துவ நிபுணர்களின் பரிந்துரைப்படி மருந்துகளைத் தொடர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஏதேனும் மாற்றங்கள் தேவைப்பட்டால், நிபுணர்களிடம் ஆலோசனை பெற வேண்டும். ஏனெனில், தன்னிச்சையான எந்தச் செயலும் உடல்நலத்திற்கு ஆபத்தை விளைவிக்கும்."
"மேலும், இணையதளங்கள் மூலம் தன்னிச்சையாக மருந்துகளை வாங்கிச் சேமிக்க வேண்டாம். அவ்வாறு வாங்க நேர்ந்தால், வாங்கும் மருந்துகள் உண்மையானவை மற்றும் சுகாதார அமைச்சில் (KKM) பதிவு செய்யப் பட்டவையா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்," என்றார் அவர்.
தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் (NPRA) இணையதளத்தின் மூலம் இந்தச் சரிபார்ப்பைச் செய்யலாம் அல்லது மருத்துவ அல்லது மருந்தியல் நிபுணர்களிடம் கேட்கலாம் என்று முஹம்மது கூறினார்.
"மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் மருந்துகளை வாங்குவது, தேவைக்கு அதிகமான மருந்து அளவை உட்கொள்ளும் அபாயத்தை ஏற்படுத்தக்கூடும்," என்றும் அவர் எச்சரித்தார்.
ஜூன் வரை மருந்து கையிருப்பு சீராக உள்ளது; மக்கள் பதற்றத்தில் மருந்துகளை வாங்க வேண்டாம் என அறிவுரை
14 ஏப்ரல் 2026, 6:25 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
தனியார் துறை மருத்துவக் கட்டணங்களை முறைப்படுத்த வேண்டும்
Shalini Rajamogun
26 ஜூன் 2026

selangor
312 படுக்கைகள் கொண்ட காப்பார் மருத்துவமனை 2027 மார்ச்சில் தயாராகும்
Media Selangor Team
9 ஆகஸ்ட் 2026

national
போலி மருத்துவ விடுப்பு மோசடி: e-MC முறையை ஆராய்கிறது சுகாதார அமைச்சு
Latchumy Ramamoorthy
21 ஜூன் 2026

national
உரிமம் பெற்ற வளாகங்களில் மட்டுமே மருத்துவச் சேவைகள் வழங்கப்பட வேண்டும் - சுகாதார அமைச்சு
Shalini Rajamogun
3 ஜூன் 2026

வகைnational
உங்கள் கருத்து என்ன?



