அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகத்தின் (MPAJ) 72 ஊழியர்கள் 2025-ஆம் ஆண்டுக்கான சிறந்த சேவை விருதைப் (APC) பெற்றனர்  

14 ஏப்ரல் 2026, 2:47 AM
அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகத்தின் (MPAJ) 72 ஊழியர்கள் 2025-ஆம் ஆண்டுக்கான சிறந்த சேவை விருதைப் (APC) பெற்றனர்  

அம்பாங் ஜெயா, ஏப்ரல் 14: கடந்த ஆண்டு வெளிப்படுத்திய சிறந்த செயல்திறனை அங்கீகரிக்கும் வகையில், அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகத்தின் (MPAJ) 72 ஊழியர்கள் 2025-ஆம் ஆண்டுக்கான சிறந்த சேவை விருதைப் (APC) பெற்றனர்.

விருது பெற்றவர்களில் 44 பேர் ஆண்கள், 28 பேர் பெண்கள் ஆவர். இதில் ஐவர் நிர்வாகப் பிரிவையும், 67 பேர் செயலாக்கப் பிரிவையும் சேர்ந்தவர்கள் என எம்.பி.ஏ.ஜே. துணைத் தலைவர் ஹஸ்ரோல்நிஜாம் ஷாரி தெரிவித்தார்.

"மொத்தம் 900 ஊழியர்களைக் கொண்ட எம்.பி.ஏ.ஜே.-வில், பணியில் உள்ளவர்களில் எட்டு விழுக்காட்டினருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது," என்றார் அவர்.

"சிறந்த சேவை விருது ஒரு பாராட்டுப் பத்திரம் மட்டுமல்ல; கடமைகளை நிறைவேற்றுவதில் மிகச் சிறந்த செயல் திறனையும் உயர் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்திய ஊழியர்களை அங்கீகரிக்கும் ஒரு தளமாகும்," என்று அவர் மேலும் கூறினார்.

எம்.பி.ஏ.ஜே. மாநாட்டு மையத்தில் நேற்று இரவு நடைபெற்ற இந்த விருது வழங்கும் விழாவில், சிலாங்கூர் மாநிலச் செயலாளர் டத்தோ டாக்டர் அஹ்மத் ஃபட்லி அஹ்மத் தஜுடின் விருதுகளை எடுத்து வழங்கினார்.

விருது பெற்றவர்களின் இந்த வெற்றி, தொடர்ந்து தங்களின் பணி அர்ப்பணிப்பை அதிகரிக்கவும், எம்.பி.ஏ.ஜே., மாநில அரசு மற்றும் நாட்டுக்கு மேலும் சிறந்த சேவையை வழங்கவும் ஒரு உந்துதலாக அமையும் என்று ஹஸ்ரோல் நிஜாம் நம்பிக்கை தெரிவித்தார்.

இதே நிகழ்வில், ஒருவருக்குச் சிறப்பு விளையாட்டு விருது, ஓய்வு பெற்ற 21 பேருக்குப் பாராட்டு, ஆறு குழுக்களுக்குச் சிறப்பு புத்தாக்க விருது மற்றும் மரணமடைந்த ஒரு ஊழியரின் வாரிசுக்கு நன்கொடை எனப் பல இதர விருதுகளும் வழங்கப்பட்டன.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.