ஷா ஆலம், ஏப்ரல் 12: சிலாங்கூர் மாநிலத்தின் முதியவர்கள் தொடர்ந்து சுறுசுறுப்பாக இயங்குவதோடு, வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்புகளை விரிவாக்கும் நோக்கில் 'சில்வர் எகனாமி' (Silver Economy) எனும் புதிய பொருளாதாரக் கட்டமைப்பை மாநில அரசு உருவாக்கி வருகிறது.
முதியவர்களை வெறும் உதவி பெறுபவர்களாக மட்டும் பார்க்காமல், அவர்களைப் பொருளாதாரத்திற்கும் சமுதாயத்திற்கும் பங்களிக்கக்கூடிய ஆற்றல்மிக்கவர்களாக அங்கீகரிப்பதே இந்த அணுகுமுறையின் முக்கிய நோக்கமாகும் என்று நலத்துறைக்கான மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் அன்ஃபால் சாரி தெரிவித்துள்ளார்.
வயது முதிர்ந்தோரை அதிகம் கொண்ட ஒரு சமூகமாக உருவெடுக்கும் சவாலைச் சிலாங்கூர் எதிர்கொள்ளத் தயாராகி வருவதாக மீடியா சிலாங்கூருக்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டார்.
வெறும் நலத்திட்டங்களை மட்டும் வழங்காமல், நீண்ட கால பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டு அணுகுமுறையை மாநில அரசு கையாண்டு வருவதாக அவர் விளக்கமளித்தார்.
இதன் மூலம் முதியவர்கள் தங்களின் திறமைகளையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்வதன் வாயிலாக வருமானம் ஈட்டுவதோடு, மாநிலப் பொருளாதார வளர்ச்சிக்கும் தங்களால் இயன்ற பங்களிப்பை வழங்க வழிவகை செய்யப்படும் என்று அவர் உறுதியளித்தார்.
இதே வேளையில், 'மாமா-கெர்ஜா' (MamaKerja) போன்ற திட்டங்களை மீண்டும் அமல்படுத்துவதன் மூலம் பராமரிப்புப் பொருளாதாரத் திட்டங்களை (Care Economy) மாநில அரசு வலுப்படுத்தும் என்றும் அன்ஃபால் சாரி கூறினார். குறிப்பாக, ஒரே நேரத்தில் தங்களின் குழந்தைகளையும் வயது முதிர்ந்த பெற்றோர்களையும் பராமரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள 'சாண்ட்விச் தலைமுறை' (Sandwich Generation) பெண்களுக்கு இத்திட்டம் ஒரு பெரும் பக்கபலமாக அமையும்.
நெகிழ்வான வேலை நேர முறைகள் மற்றும் தரம்மிக்க மலிவு விலை பராமரிப்புச் சேவைகளை விரிவுபடுத்துவதன் மூலம் இப்பெண்கள் மீண்டும் வேலைக்குத் திரும்புவதை மாநில அரசு ஊக்குவிக்கும் என்றார் அவர்.
மேலும், எதிர்காலத் திட்டமாக 'ரெஸ்பைட் கேர் வெல்னஸ் ஹப்' (Respite Care Wellness Hub) எனும் மையத்தை அறிமுகப்படுத்த மாநில அரசு ஆலோசித்து வருகிறது.
இந்த மையம் முதியவர்களைப் பராமரிப்பவர்களுக்கு ஒரு தற்காலிக ஓய்வு இடமாக அமைவதோடு மட்டுமல்லாமல், முதியவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்குத் தேவையான சுகாதாரப் பரிசோதனைகள், ஆரம்பக்கட்ட மருத்துவத் தலையீடுகள் மற்றும் உளவியல் ரீதியான ஆதரவுகளை வழங்கும் ஒரு முழுமையான மையமாகத் திகழும் என்று அன்ஃபால் சாரி சுட்டிக்காட்டினார்.








