எல்லைப் பகுதி எரிபொருள் நிலையங்களில் கடத்தல் நடவடிக்கைகளைத் தடுக்க காவல்துறை கண்காணிப்பு தீவிரம்

12 ஏப்ரல் 2026, 2:48 AM
எல்லைப் பகுதி எரிபொருள் நிலையங்களில் கடத்தல் நடவடிக்கைகளைத் தடுக்க காவல்துறை கண்காணிப்பு தீவிரம்

ஷா ஆலம், ஏப்ரல் 12: மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றங்களால் எரிபொருள் விலை மற்றும் விநியோகச் சங்கிலியில் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ள நிலையில், எல்லைப் பகுதிகளில் உள்ள எரிபொருள் நிலையங்களில் காவல்துறை அதிகாரிகளைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் கடத்தப்படுவதைத் தடுத்து, நாட்டின் மானியச் சுமையைக் குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

பெர்லிஸ், பாடாங் பெசார் குடிநுழைவு, சுங்கம், தனிமைப்படுத்தல் மற்றும் பாதுகாப்பு (ICQS) வளாகத்தில் மேற்கொண்ட ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடு முழுவதும் உள்ள 4,000-க்கும் மேற்பட்ட எரிபொருள் நிலையங்களில், எல்லைக் கோட்டிற்கு அருகில் உள்ள 80-க்கும் மேற்பட்ட நிலையங்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்றார்.

அமைச்சரவையின் அண்மைக்கால உத்தரவின்படி, காவல்துறைபடையினர் இந்த நிலையங்களைக் கண்காணிப்பார்கள் என்றும், அதே வேளையில் போதைப்பொருள் ஒழிப்பு, போக்குவரத்து மற்றும் குற்றத் தடுப்பு போன்ற அவர்களின் அன்றாடக் கடமைகளில் எந்தப் பாதிப்பும் ஏற்படாத வகையில் இந்த கூடுதல் பணி அமையும் என்றும் அவர் விளக்கமளித்தார்.

மேற்கு ஆசிய நெருக்கடிக்கு முன்னதாக, இலக்கு நிர்ணயிக்கப்பட்ட பெட்ரோல் மற்றும் டீசல் மானியத்திற்காக அரசாங்கம் மாதத்திற்கு சுமார் 700 மில்லியன் வெள்ளியைச் செலவிட்டு வந்தது. ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழலால் இந்த மானியச் சுமை மாதம் ஒன்றுக்கு சுமார் 6 பில்லியன் வெள்ளி வரை அசுர வேகத்தில் அதிகரித்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இத்தகைய இக்கட்டான சூழலில், மானிய விலையிலான எரிபொருள் சட்டவிரோதமாகக் கடத்தப்படுவதைத் தடுப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரப் பளுவைக் குறைக்க முடியும் என்றும் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் நம்பிக்கை தெரிவித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.