கிள்ளான் பள்ளத்தாக்கு ரயில் சேவை அட்டவணையை கேடிஎம்பி மாற்றியமைக்கிறது

10 ஏப்ரல் 2026, 2:40 AM
கிள்ளான் பள்ளத்தாக்கு ரயில் சேவை அட்டவணையை கேடிஎம்பி மாற்றியமைக்கிறது

கோலாலம்பூர், ஏப்ரல் 10: கிள்ளான் பள்ளத்தாக்கு இரட்டை வழித்தடத் திட்டத்தின் (KVDT2) இரண்டாம் கட்ட மேம்பாட்டுப் பணிகளை முன்னிட்டு, ஏப்ரல் 18-ஆம் தேதி முதல் புலாவ் செபாங்-பத்துமலை-புலாவ் செபாங் வழித்தடத்திற்கான கேடிஎம் கொமுட்டர் சேவை அட்டவணையை கெரெத்தாப்பி தானா மலாயு பெர்ஹாட் (கேடிஎம்பி) மறுசீரமைக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

சாலாக் செலாத்தான் நிலையம் முதல் சிரம்பான் நிலையம் வரையிலான பகுதியில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் நடைபெறுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த அட்டவணை மாற்றம், 67 கிலோமீட்டர் நீளமுள்ள ரயில் தடத்தை மேம்படுத்தும் பணிகள் பாதுகாப்பாகவும் திறமையாகவும் மேற்கொள்ளப்படுவதற்கு வழிவகுக்கும். மேலும், இத்திட்டத்தை விரைவாக முடிக்கவும் இது உதவும் என்று கேடிஎம்பி ஓர்
அறிக்கையில் தெரிவித்துள்ளது.

"இந்த மேம்பாட்டுப் பணிகளின் போது, பயணிகள் மற்றும் சரக்கு ரயில்களின் சேவை தொடர்வதை உறுதி செய்வதற்காக, சம்பந்தப்பட்ட வழித்தடத்தில் ஒற்றைத் தட முறை பயன்படுத்தப்படும். இந்த மறுசீரமைப்பு, நீண்ட காலத்திற்கு ரயில் சேவையின் பாதுகாப்பு, நிலைத்தன்மை மற்றும் செயல்திறனை அதிகரிக்க உதவும்," என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.

இந்த ஆண்டு இறுதி வரை தொடரும் என எதிர்பார்க்கப்படும் இத்திட்டத்தின் போது, புலாவ் செபாங்-பத்துமலை-புலாவ் செபாங் வழித்தடத்தில் காலை மற்றும் மாலை உச்ச நேரங்களில் கேடிஎம் கொமுட்டர் சேவைகளின் எண்ணிக்கை 15 மற்றும் 30 நிமிட இடைவெளியில் ஐந்து சேவைகளாக வழங்கப்படும்.

"இக்காலக்கட்டத்தில், மிட்வெலி-புலாவ் செபாங் மற்றும் புலாவ் செபாங்-பண்டார் தாசேக் செலாத்தான் ஆகிய வழித்தடங்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கேடிஎம் கொமுட்டர் சேவை இயங்காது," என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சாலாக் செலாத்தான் நிலையம் முதல் சிரம்பான் நிலையம் வரையிலான தடம், தீவிர பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்காக இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை முழுமையாக மூடப்படும்.

இதனிடையே, இந்த மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக, ஜேபி சென்ட்ரல்-கேஎல் சென்ட்ரல்-ஜேபி சென்ட்ரல் வழித்தடத்திற்கான இரண்டு மின்சார ரயில் சேவைகளின் (ETS) அட்டவணை மற்றும் ரயில் எண்களும் மாற்றியமைக்கப்படுகின்றன.

அதன்படி, ஜேபி சென்ட்ரலில் இருந்து கேஎல் சென்ட்ரல் செல்லும் EP9530 (முன்பு EP9536) ரயில் பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு இரவு 7.20 மணிக்கு சென்றடையும். கேஎல் சென்ட்ரலில் இருந்து ஜேபி சென்ட்ரல் செல்லும் EP9535 (முன்பு EP9537) ரயில் இரவு 8 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 12.20 மணிக்கு சென்றடையும்.

மற்ற இடிஎஸ் (ETS) மற்றும் கேடிஎம் கார்கோ சேவைகள் வழக்கம் போல் இயங்கும்.

பயணிகள் தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிடுமாறும், கேடிஎம்பி-யின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது சமூக ஊடகங்கள் வழியாக சமீபத்திய அட்டவணையைச் சரிபார்க்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் தகவல்களுக்கு, 03-9779 1200 என்ற எண்ணில் கேடிஎம்பி அழைப்பு மையத்தைத் தொடர்பு கொள்ளலாம்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.