எண்ணெய் விலை உயர்வு குறித்து தவறான தகவல்கள் - பிரதமர் அன்வார் சாடல்

9 ஏப்ரல் 2026, 4:22 AM
எண்ணெய் விலை உயர்வு குறித்து தவறான தகவல்கள் - பிரதமர் அன்வார் சாடல்

புத்ராஜெயா, ஏப்ரல் 9: எண்ணெய் விலை உயர்வு மலேசியாவில் மட்டும்தான் நடப்பதாகக் கூறப்படும் வாதங்களைப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடுமையாக மறுத்துள்ளார்.

இத்தகைய கூற்றுகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என்றும், பொதுமக்களைக் குழப்பும் நோக்கில் பரப்பப்படுவதாகவும் அவர் சாடினார்.

புத்ராஜெயாவில் நடைபெற்ற போக்குவரத்து அமைச்சின் மாதாந்திரக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், செல்வாக்குமிக்க சமய அறிஞர் ஒருவர் கூட இந்த விவகாரத்தில் ஆதாரமற்றக் கருத்துக்களை முன்வைப்பது வருத்தமளிப்பதாகக் குறிப்பிட்டார்.

"மத ரீதியான பார்வைகளுக்குள் அறிவியலற்றக் கருத்துக்களைப் புகுத்தி, மற்ற நாடுகளில் எண்ணெய் விலை உயரவில்லை என்றும், மலேசியாவில் மட்டும்தான் உயர்கிறது என்றும் கூறுவது அறிவின்மையின் வெளிப்பாடாகும்.

இத்தகைய கருத்துக்கள் மக்களுக்கு உதவாது, மாறாக அவர்களைத் தவறாக வழிநடத்தும்," என்று அவர் சுட்டிக்காட்டினார்.

முன்னதாக, பாஸ் (PAS) கட்சித் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங், தீபகற்ப மலேசியாவில் மட்டும் டீசல் விலை உயர்த்தப்பட்டதை விமர்சித்திருந்தார். மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் மற்றும் ஹார்முஸ் நீரிணையில் ஈரானின் தடைகளை ஒரு காரணமாகக் கூறுவதில் அடிப்படை ஆதாரம் இல்லை என அவர் தமது 'மிண்டா பிரெசிடென் பாஸ்' கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில் பேசிய பிரதமர் அன்வார், எரிபொருள் விநியோகத்தைக் கொண்டு வருவதற்கான காப்புறுதிச் செலவுகள் (Insurance costs) 100 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளதே இந்த விலை மாற்றத்திற்கு முக்கியக் காரணி என்று விளக்கமளித்தார்.

இதற்கிடையில், நிதி அமைச்சின் (MOF) அறிவிப்பின்படி, இன்று முதல் தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை லிட்டருக்கு 70 சென் உயர்ந்துள்ளது. அதேபோன்று, நாடு முழுவதும் மானியமற்ற பெட்ரோல் வகைகளான RON97 மற்றும் RON95 ஆகியவற்றின் விலை லிட்டருக்கு 40 சென் அதிகரித்துள்ளது.

அதன்படி, RON97 பெட்ரோல் இனி ஒரு லிட்டர் RM5.35 ஆகவும், RON95 பெட்ரோல் (மானியமின்றி) RM4.27 ஆகவும் விற்பனை செய்யப்படும்.

மலேசியாவில் எரிபொருள் விலையானது அன்றாட விலையை அடிப்படையாகக் கொள்ளாமல், வாராந்திர சராசரி விலையைக் கொண்டே நிர்ணயிக்கப்படுவதாக நிதி அமைச்சு மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளது.

- பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.