ஷா ஆலம்: கடந்த ஆண்டில் நாடு தழுவிய அளவில் மொத்தம் 49,794 தீயணைப்பு நீர்க் குழாய்கள் (பயர் ஹைட்ரண்ட்) பல்வேறு சேதங்களை எதிர் கொண்டதாகவும், செயல் படத் தவறியதாகவும் கண்டறியப் பட்டுள்ளது.
மலேசியத் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (JBPM) வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த ஆண்டு மேற்கொள்ளப் பட்ட காலமுறை ஆய்வுகளின் போது பரிசோதிக்கப்பட்ட 363,340 பொது தீயணைப்பு நீர்க் குழாய்களில் இந்த எண்ணிக்கை சுமார் 13.7 விழுக்காட்டைக் குறிக்கிறது.
தீயணைப்பு நீர்க் குழாய்கள் சேதமடைவதற்கு உலோக பாகங்கள் காணாமல் போவதே முக்கியக் காரணம் என்று விரிவான பகுப்பாய்வில் தெரியவந்துள்ளது. "புள்ளி விவரங்களின்படி, 'அவுட்லெட் பில்லர் கேப்' காணாமல் போனது தொடர்பான 10,424 வழக்குகள், 'சேம்பர்' மூடி இல்லாதது தொடர்பான 8,109 வழக்குகள் மற்றும் தூண் உடைந்தது அல்லது கடுமையாகச் சேதம் அடைந்தது போன்ற 3,359 கடுமையான பௌதீக சேதங்கள் பதிவாகியுள்ளன," என்று அந்த அறிக்கை தெரிவித்தது.
"இந்த பாகங்கள் இல்லாதது, தீயணைப்புக் குழாய்களின் உள் அமைப்பிற்குள் அந்நியப் பொருட்கள் நுழைந்து இயந்திர சேதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், தீயணைப்பு நடவடிக்கைகளின் போது முக்கியமான 'கோல்டன் டைம்' எனப்படும் நேரத்தில் குழாய்களை இணைக்கும் பணிகளையும் பாதிக்கிறது.
"தீயணைப்பு நீர்க் குழாய்களைச் சேதப் படுத்துவது அல்லது அதன் செயல் பாட்டைத் தடுப்பது என்பது பொதுச் சொத்துகளுக்கு எதிரான ஒரு சிறிய குற்றம் மட்டுமல்ல, அது சம்பவ மேலாண்மையின் இயக்கத்தையே மாற்றக்கூடிய ஒரு ஆபத்துக் காரணியாகும் என்று JBPM வலியுறுத்தியுள்ளது.
"சம்பவ இடத்திற்கு வரும் தீயணைப்பு வீரர்கள், தீயணைப்பு நீர்க் குழாய் தடுக்கப்பட்டு இருப்பதையோ, புதைக்கப்பட்ட இருப்பதையோ அல்லது அதன் முக்கிய பாகங்கள் காணாமல் போயிருப்பதையோ கண்டறிந்தால், அசல் செயல் திட்டத்தை உடனடியாக மாற்றி அமைக்க வேண்டியுள்ளது.
"இந்தத் தாமதம், தீயணைப்புப் படையினர் தங்களது வாகனங்களில் உள்ள வரையறுக்கப் பட்ட நீர் விநியோகம் அல்லது கூடுதல் மனிதவளம் மற்றும் நேரம் தேவைப்படும் 'ரிலே பம்பிங்' போன்ற மாற்று வழிகளைப் பயன் படுத்த கட்டாயப் படுத்துகிறது. நீராதாரத்தைப் பெறுவதில் ஏற்படும் எந்த ஒரு தாமதமும், ஒரு சிறிய தீ பெரிய அளவிலான சம்பவமாக மாறி, உயிர் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் அபாயத்தை உருவாக்குகிறது," என்று அது மேலும் கூறியது.
தீயணைப்பு நீர் குழாய்களைச் சேதப்படுத்துவது அல்லது அணுகுவதைத் தடுப்பது, தீயணைப்பு சேவைகள் சட்டம் 1988 (சட்டம் 341), பிரிவு 26-இன் கீழ் ஒரு குற்றமாகும் என்று பொது மக்களுக்கு JBPM நினைவூட்டியது.






