கூச்சிங், ஸ்ரீ அமான், தாமான் செந்தோசா இன்டாவில் இன்று அதிகாலை வீடு ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒன்பது வயது சிறுவன் உடல் கருகி உயிரிழந்தான்.
அதிகாலை 3.02 மணியளவில் அவசர அழைப்பு கிடைத்ததாகவும், சம்பவம் நிகழ்ந்தபோது அந்த வீட்டில் ஆறு பேர் இருந்ததாகவும் சரவாக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்த ஸ்ரீ அமான் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய வீரர்கள், இரண்டு மாடி நிரந்தர வீடு ஒன்று 100 விழுக்காடு எரிந்து நாசமானதைக் கண்டனர் என அந்த அறிக்கை குறிப்பிட்டது.
சோதனையின் போது, வீட்டின் மேல் மாடியில் சிறுவன் உடல் கருகிய நிலையில் சடலமாக மீட்கப் பட்டான். அவனது உடல் மேலதிக நடவடிக்கைகளுக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
சரவாக் தீயணைப்புத் துறையின்படி, 41 வயது பெண் மற்றும் 65 வயது ஆண் ஆகிய இருவரின் உடலிலும் தீக்காயங்கள் ஏற்பட்டன. அவர்கள் சிகிச்சைக்காக ஸ்ரீ அமான் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
"கால்களில் தீக்காயங்களுக்கு உள்ளான 40 வயது பெண், 13 வயது இளம்பெண் மற்றும் 15 வயது இளைஞன் ஆகிய மற்ற மூன்று பேரை பொதுமக்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்," என்று அந்த அறிக்கை மேலும் தெரிவித்தது.
தீவிபத்துக்கான காரணமும் சேத மதிப்பும் இன்னும் விசாரணையில் உள்ளது.




