ஈப்போ: கிள்ளான், சிலாங்கூரில் சமீபத்தில் நிகழ்ந்த ஒரு மனதை உருக்கும் சாலை விபத்தில் தந்தையை இழந்த இரண்டு சிறுவர்களை மஜ்லிஸ் அமானா ரக்யாட் (மாரா), தனது யாயாசான் பெலாஜாரான் மாரா (YPM) கீழ் கல்விப் பாதுகாவலராக ஏற்றுக் கொண்டுள்ளது.
மரணமடைந்த 33 வயதான அமிருல் ஹபீஸ் ஓமாரின் பிள்ளைகளான 9 வயது முஹம்மது ஆக்கிஃப் அம்ஸ்யார் மற்றும் 7 வயது முஹம்மது ஆஃபிஃப் இஸ் ரய்க்கால் ஆகியோரே அந்த இரு சிறுவர்கள் என மாரா தலைவர் டத்தோ டாக்டர் அஷ்ரஃப் வாஜ்டி டுசுக்கி தெரிவித்தார்.
இந்த முயற்சி, ஒரு தற்காலிக உதவி என்பதைத் தாண்டி, அச் சிறுவர்களின் கல்வி தொடர்ந்து பாதுகாக்கப் படுவதை உறுதி செய்வதற்கான ஒரு நீண்ட கால அர்ப்பணிப்பாகும் என்று அவர் கூறினார். இது மாராவின் சமூகப் பொறுப்பு மற்றும் அக்கறையைப் பிரதிபலிக்கிறது.
"தொடக்கப் பள்ளியில் படிக்கும்போது ஒருவருக்கு மாதந்தோறும் RM 120 உதவித் தொகை வழங்கப்படும். அவர்கள் இடைநிலைப் பள்ளிக்குச் செல்லும்போது அது RM150 ஆக உயர்த்தப்படும். அவர்கள் தங்கள் பள்ளிப் படிப்பை முடிக்கும் வரை தொடர்ச்சியான கண்காணிப்பு மேற்கொள்ளப் படும்," என்று அவர் கூறினார்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து உதவி வழங்கிய லாருட் அம்னோ தொகுதித் தலைவர் டத்தோ முகமது தாவூத் முகமது யூசோஃப் மற்றும் YPM தலைமைச் செயல்முறை அதிகாரி ஃபைசலுடின் முகமது யூசுஃப் ஆகியோருக்கு அவர் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
முஹம்மது ஆக்கிஃப் அம்ஸ்யார் மற்றும் முஹம்மது ஆஃபிஃப் இஸ் ரய்க்கால் ஆகிய இருவரும் மன உறுதியுடன் இருக்க வேண்டும் என்றும், விடாமுயற்சியுடன் கல்வி கற்க வேண்டும் என்றும் அஷ்ரஃப் வாஜ்டி ஊக்கமளித்தார்.
"இன்ஷாஅல்லாஹ், ஒரு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க மாரா எப்போதும் உங்களுடன் இருக்கும். எல்லாம் வல்ல இறைவன் அமரரின் ஆன்மா சாந்தியடைய அருள் புரிவாராக. அல்-ஃபாத்திஹா," என்றார் அவர்.
அதே வேளையில், இந்தச் சோகம் ஒரு தந்தை உயிரைப் பறித்ததோடு மட்டுமல்லாமல், முழு குடும்பத்திற்கும் கடும் துயரத்தை ஏற்படுத்தி-யுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மரணமடைந்த அமிருல் ஹபீஸின் மனைவி, 32 வயதான நோர் நடியா அப்துல் மஜித், கணவரின் இறுதிச் சடங்குகளைக் கவனிக்க வெளியே சென்றிருந்தபோது, அமரரின் தாயார், 56 வயதான ஃபரிடா அஹ்மத்துடன் காணொளி அழைப்பு மூலம் பேசியதாக அஷ்ரஃப் வாஜ்டி கூறினார்.
"கண்ணீருடன் பேசிய அவர், தனது மகன் ஒரு நல்ல பிள்ளை என்றும், குடும்பத்தை மகிழ்ச்சியாக வைத்திருக்க எப்போதும் முயற்சி செய்தான் என்றும் பகிர்ந்து கொண்டார். இந்த இழப்பு ஒரு தனிநபரின் இழப்பு மட்டுமல்ல, இன்னும் சிறுவர்களாக இருக்கும் பிள்ளைகளின் ஆதரவை இழந்ததுமாகும்," என்று அவர் மேலும் கூறினார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கிள்ளான், ஜாலான் ராயா பாராட் பகுதியில் குடிபோதையிலும், போதைப்பொருள் உட்கொண்டும் வாகனம் ஓட்டி மோட்டார் சைக்கிளோட்டியின் மரணத்திற்கு காரணமானதாக நம்பப்படும் ஆடவர் நான்கு நாட்கள் தடுத்து வைக்கப் பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.







