கோலாலம்பூர், ஜனவரி 16 — தேசிய ஹலால் தொழில்துறை பெருந்தொகுதிகள், குறிப்பாக பெண்கள் உள்ளிட்ட தொழில் முனைவோர் வளர்ச்சிக்கு உத்தியோகபூர்வ ஒத்துழைப்பை வலுப்படுத்த, ஹலால் மேம்பாட்டு நிறுவனம் (எச்டிசி) மற்றும் மக்கள் நம்பிக்கை மன்றம் (மாரா) இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் (எம்ஓயூ) கையெழுத்தானது.மேலும், எச்டிசி, ரப்பர் தொழில் சிறு விவசாயிகள் மேம்பாட்டு ஆணையம் (ரிஸ்டா) உடனான ஒரு ஒத்துழைப்பு ஒப்பந்தத்திலும் (எம்ஓசி) கையெழுத்திட்டுள்ளது.
இது ஹலால் தொழில்துறை மேம் பாட்டை, குறிப்பாக தொழில் முனைவோர் மற்றும் கிராமப்புற சமூகங்களிடையே ஊக்குவிக்கும் நோக்குடையது. இந்த கையெழுத்து விழாவை, கிராமப்புற மற்றும் பிராந்திய மேம்பாட்டு அமைச்சருமான துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமது சாஹிட் ஹமிடி இன்று கண்காணித்தார்.
எம்ஓயூ மற்றும் எம்ஓசி பரிமாற்ற விழா, உலக வர்த்தா மையம் கோலாலம்பூரில் இன்று நடைபெற்ற 2026 அக்ரோ-கமோடிட்டி எக்ஸ்போ-வுமன் இன் ஹலால் இண்டஸ்ட்ரி (டபிள்யூஎச்ஐ) நிகழ்வின் போது நடைபெற்றது.
இதில், தோட்டக்கலை மற்றும் விளைபொருட்கள் அமைச்சர் மற்றும் டபிள்யூ எச் ஐ திட்டத் தலைவருமான டத்தோ ஸ்ரீ நொரைனி அஹ்மத்; முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஜொஹாரி அப்துல் கானி; மாரா தலைவர் டத்தோ அஷ்ரஃப் வஜ்தி சுஸுக்கி; ரிஸ்டா தலைவர் மன்ன்ட்ஸ்ரி நாசிப் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த எம்ஓயூ, திறன் கட்டமைப்பு, தொழில் முனைவு அதிகாரமளித்தல், திறன் பயிற்சி, ஹலால் சான்றிதழ், சந்தை அணுகல் மற்றும் நிதி ஆதரவு உள்ளிட்ட உயர் தாக்க திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் ஹலால் தொழில் முனைவோரின் வளர்ச்சியை மேம்படுத்துவது, குறிப்பாக ஹலால் தொழில் துறையில் பெண்களின் பங்களிப்பை வலியுறுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என எச்டிசி தெரிவித்தது.
அதன்வநிர்வாக இயக்குநர் பதவியை கடமையாகச் செயல்படுத்தும் எச்டிசி தலைவர் டத்தோ அஸ்ஹாரி ஷாரி, இந்த ஒத்துழைப்பு நாட்டின் ஹலால் தொழில் துறைக்கான முன்னணி நிறுவனமாக எச்டிசியின் பங்குடன் இசைவானதாக உள்ளது என்றார்.
"இந்த எம்ஓயூ, உள்ளடக்கிய மற்றும் நிலையான ஹலால் பெருந் தொகுதியை விரிவுபடுத்துவதில் எச்டிசியின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. அதே நேரத்தில், பெண் தொழில்முனைவோருக்கு உள்நாட்டு மற்றும் உலக அளவில் வளர்ச்சி பெறவும் போட்டியிடவும் கூடுதலான வாய்ப்புகளை திறக்கிறது," என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இதேவேளை, ரிஸ்டாவுடனான எம்ஓசியின் நோக்கம், தொழில் முனைவோரின் திறன் வளர்ச்சி, ஹலால் இணக்கம் மேம்படுத்துதல், மதிப்புச் சங்கிலி பலப்படுத்துதல் மற்றும் தேசிய ஹலால் தொழில்துறை பெருந் தொகுதியில் கிராமப்புற சமூகங்களை ஈடுபடுத்துதல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு வாய்ப்புகளை ஆராய்வதாகும்.
"இந்த எம்ஓசி மூலம், ரிஸ்டாவின் கீழ் உள்ள சிறு விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோருக்கு அதிகாரமளிக்கும் முயற்சிகளை ஆதரிக்க, ஹலால் தொழில்துறை மேம்பாட்டில் முன்னணி நிறுவனமாக எச்டிசியின் நிபுணத்துவத்தையும் பங்கையும் பயன்படுத்தும். அதே நேரத்தில், ரிஸ்டா, குறிப்பாக கிராமப்புற பகுதிகளில் அடித்தள சமூகங்களுக்கு ஹலால் மேம்பாட்டு திட்டங்களை எட்டிப் பிடிப்பதில் ஒரு உத்தியோகபூர்வ கூட்டாளியாக செயல்படும்," என்று எச்டிசி தெரிவித்தது.
2030 ஹலால் தொழில்துறை முதன்மை திட்டத்தின் (எச்ஐஎம்பி) லட்சியங்களுடனும் இந்த ஒத்துழைப்பு இசைவானதாக உள்ளது என எச்டிசி தெரிவித்தது. இந்தத் திட்டம், தேசிய பொருளாதார வளர்ச்சிக்கு முழுமையாக பங்களிக்கும் திறன் கொண்ட போட்டித்தன்மை மிக்க, உயர் தாக்க ஹலால் தொழில் துறையின் வளர்ச்சியை வலியுறுத்துகிறது.