உயிரைப் பறிக்கும் அளவில் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க சிலாங்கூர் அரசு வலியுறுத்து

31 மார்ச் 2026, 3:35 AM
உயிரைப் பறிக்கும் அளவில் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க சிலாங்கூர் அரசு வலியுறுத்து

ஷா ஆலம், 31 மார்ச்: கடந்த ஞாயிற்றுக்கிழமை கிள்ளான், ஜாலான் ராயா பாராட்டில் நிகழ்ந்த கோரமான சாலை விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, மது மற்றும் போதைப்பொருள் அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனச் சிலாங்கூர் மாநில அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

இச்சம்பவம் குறித்து வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட ஓட்டுநருக்குச் சட்டப்படி வழங்கப்படக்கூடிய அதிகபட்சத் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்றும் மாநில அரசு வலியுறுத்தியுள்ளது.

இந்த விபத்தில் 32 வயதான அமிருல் ஹபீஸ் ஓமார் என்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான அவர், சாலை விதிகளை மீறிச் செயல்பட்டதாகக் கருதப்படும் ஒரு வாகன ஓட்டுநரால் மோதப்பட்டு உயிரிழந்தது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இத்தகைய பொறுப்பற்ற செயல்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்படுவது சமூகத்திற்கு ஒரு பாடமாகவும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் ஒரு எச்சரிக்கையாகவும் அமையும் என்று இது குறித்துக் கருத்துரைத்த சிலாங்கூர் மாநில மந்திரி புசாரின் அரசியல் செயலாளர் சைபுடின் ஷாபி முகமட் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்திய அவர், உயிரிழந்த அமிருல் ஹபீஸின் ஆன்மா இறைவனடி சேரப் பிரார்த்திப்பதாகவும், முறையான சட்ட நடைமுறைகள் மூலம் உரிய நீதி நிலைநாட்டப்படும் என்று நம்புவதாகவும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மற்ற சாலைப் பயனாளிகளின் பாதுகாப்பைப் பொருட்படுத்தாமல் சுயநலத்துடன் செயல்படுவதை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தேசிய போதைப்பொருள் எதிர்ப்புச் சங்கத்தின் (PEMADAM) கௌரவச் செயலாளராகவும் பொறுப்பு வகிக்கும் சைபுடின், குற்றவாளிகள் மீது 1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டப்பிரிவு 44(1) மற்றும் 1952-ஆம் ஆண்டு அபாயகரமான போதைப்பொருள் சட்டப்பிரிவு 15(1)(a) ஆகியவற்றின் கீழ் உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

பொதுமக்களின் உயிரைப் பறிக்கும் இத்தகைய விதிமீறல்களுக்கு எதிராகக் கடுமையான அமலாக்கத்தை மாநில அரசு எப்போதும் ஆதரிக்கும் என்றும் அவர் கூறினார்.

இச்சம்பவம் தொடர்பாக, 20 வயது மதிக்கத்தக்கச் சந்தேக நபர் நான்கு நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கிள்ளான் நீதிபதி நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் சிட்டி சுபைடா மாஹாட் இந்தத் தடுப்புக் காவல் உத்தரவைப் பிறப்பித்துள்ள நிலையில், இது குறித்த மேல் விசாரணைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.