மத்திய கிழக்கு பதற்றங்களுக்கு மத்தியில் சிக்கனமாகச் செலவு செய்ய சிலாங்கூர் மக்கள் அறிவுறுத்து

29 மார்ச் 2026, 7:49 AM
மத்திய கிழக்கு பதற்றங்களுக்கு மத்தியில் சிக்கனமாகச் செலவு செய்ய சிலாங்கூர் மக்கள் அறிவுறுத்து

ஷா ஆலம், மார்ச் 29 - மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழலைக் கருத்தில் கொண்டு, சிலாங்கூர் மாநில மக்கள் அனைவரும் தங்களின் நிதி நிலையைச் சீராகத் திட்டமிடவும், தேவையற்றச் செலவுகளைத் தவிர்த்து சிக்கனத்தைக் கடைப்பிடிக்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

சிலாங்கூர் மாநில நுகர்வோர் விவகாரங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ரிசாம் இஸ்மாயில் இது குறித்துத் தெரிவிக்கையில், ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையிலான மோதல் போக்கு, உலகளாவிய உணவு விநியோகச் சங்கிலியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளார்.

குறிப்பாக, ஹார்முஸ் நீர்ச்சந்தி (Strait Hormuz) மூடப்பட்டால், உலக எண்ணெய் விநியோகத்தில் சுமார் 25 விழுக்காடு பாதிப்பு ஏற்படும் என்றும், இது நேரடியாக விவசாய இடுபொருட்களின் விலை மற்றும் உணவுப் பொருட்களின் விலையேற்றத்திற்கு வழிவகுக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய கடும் வெப்ப நிலையும் இந்தச் சூழலை மேலும் சிக்கலாக்கும் என்பதால், மக்கள் தங்கள் அன்றாடத் தேவைகளுக்கான நிதி ஒதுக்கீட்டை முன்கூட்டியே திட்டமிடுவது அவசியம் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

அரசுத் தரப்பில் எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளக்கிய அவர், பொது ஊழியர்களுக்கான 'வீட்டிலிருந்து பணிபுரியும்' (BDR) முறை படிப்படியாக அமல்படுத்தப்படுவது, இத்தகைய உலகளாவிய நெருக்கடிகளை எதிர்கொள்ள மக்களுக்கு உதவும் என்று தெரிவித்தார்.

மேலும், சிலாங்கூர் மாநில அரசு உள்நாட்டு வணிகம் மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சகத்துடன் (KPDN) இணைந்து, மாநிலத்தில் உணவு விநியோகம் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்து வருவதாகவும் அவர் கூறினார்.

மக்கள்தொகை அதிகம் கொண்ட மாநிலமான சிலாங்கூரில், உணவுப் பொருட்களின் கையிருப்பை உறுதி செய்வது மட்டுமல்லாமல், நிலவும் நெருக்கடியைப் பயன்படுத்தி எவரும் விலையைத் தன்னிச்சையாக உயர்த்தாத வண்ணம் விலைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்றும் டத்தோ ரிசாம் இஸ்மாயில் உறுதியளித்துள்ளார்.

இக்கட்டான இந்தக் காலக்கட்டத்தில் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்படுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.