கெடாவின் நான்கு மாவட்டங்களில் இரண்டாம் நிலை வெப்ப அலை எச்சரிக்கை

29 மார்ச் 2026, 6:37 AM
கெடாவின் நான்கு மாவட்டங்களில் இரண்டாம் நிலை வெப்ப அலை எச்சரிக்கை

கோலாலம்பூர், மார்ச் 29 - மலேசியாவின் வடக்கு மாநிலங்களில் நிலவி வரும் கடும் வெப்பம் காரணமாக, கெடா மாநிலத்தின் கோத்தா ஸ்டார், போக்கோக் செனா, பெண்டாங் மற்றும் பாலிங் ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று காலை 6 மணி நிலவரப்படி 'இரண்டாம் நிலை' வெப்ப அலை பதிவாகியுள்ளதாக மலேசிய வானிலை ஆய்வு மையம் (MetMalaysia) எச்சரிக்கை விடுத்துள்ளது.

வானிலை ஆய்வு மையத்தின் தற்போதைய தரவுகளின்படி, கெடாவின் பண்டார் பாரு, கூலிம், கோலா மூடா, லங்காவி தீவு, குபாங் பாசு மற்றும் சிக் ஆகிய பகுதிகளில் 'முதலாம் நிலை' (எச்சரிக்கை) வெப்பம் நிலவுகிறது.

இதேபோல், பெர்லிஸ் மாநிலம் முழுவதும், பினாங்கின் வட செபராங் பிறை மற்றும் பேராக் மாநிலத்தின் கிந்தா, கோலா கங்சார், உலு பேராக் ஆகிய இடங்களிலும் முதலாம் நிலை வெப்ப அலை பதிவாகியுள்ளது.

பொதுவாக, ஒரு பகுதியில் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு 37°C முதல் 40°C வரையிலான வெப்பநிலை நீடித்தால் அது இரண்டாம் நிலை வெப்ப அலையாகவும், 35°C முதல் 37°C வரை நீடித்தால் அது முதலாம் நிலை எச்சரிக்கையாகவும் கருதப்படுகிறது.

இந்தக் கடுமையான வெப்பச் சூழலைக் கருத்தில் கொண்டு, கெடா மாநிலக் கல்வித் துறை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, கோத்தா ஸ்டார் மற்றும் பெண்டாங் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு 'இல்லக் கல்வி கற்றல் மற்றும் கற்பித்தல்' (PdPR) முறை அமல்படுத்தப்படும்.

கடந்த வியாழக்கிழமை (மார்ச் 26) முதல் நேற்று வரை தொடர்ந்து மூன்று நாட்களாக இந்த இரு மாவட்டங்களிலும் இரண்டாம் நிலை வெப்ப அலை நிலவியதாக வானிலை ஆய்வு மையம் வழங்கிய அறிக்கையின் அடிப்படையில் மாணவர்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால், பொதுமக்கள் போதிய அளவு நீர் அருந்துமாறும், தேவையற்ற வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.