கோலாலம்பூர், மார்ச் 26 – இந்த ஆண்டு ஜூன் மாதத்தின் தொடக்கம் அல்லது மத்தியில் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படும் கடும் வெப்ப வானிலையை முன்னிட்டு, மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அறிவுறுத்தியுள்ளார்.
சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார் அவர்களின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் இன்று பதிவேற்றம் செய்யப்பட்ட ஒரு பதிவில், வெப்பமான காலநிலைக்கு ஆளாகக்கூடிய வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்துக்கொள்வதன் மூலமும், இக்காலத்தில் போதுமான அளவு தண்ணீர் பருகுவதை உறுதி செய்வதன் மூலமும் உடல்நலத்தைப் பேண வேண்டியதன் அவசியத்தை மாமன்னர் வலியுறுத்தினார்.
இந்த வெப்ப வானிலை நிகழ்வினால் மாணவர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய, கல்வி அமைச்சு இவ்விவகாரத்தில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்றும் சுல்தான் இப்ராஹிம் ஆணையிட்டுள்ளார்.
"அதே வேளையில், வெப்பமான மற்றும் காற்று வீசும் சூழல் தீயை வேகமாகப் பரவச் செய்யும் என்பதால், பொதுமக்கள் திறந்த வெளியில் எதையும் எரிப்பதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்," என்று மாமன்னர் குறிப்பிட்டார்.
"நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட முதியவர்கள் மற்றும் குழந்தைகள், எந்தவிதமான உடல்நலப் பாதிப்புகளையும் தவிர்ப்பதற்காகக் கடும் வெயிலில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும்," என்றும் மாமன்னர் மேலும் அறிவுறுத்தினார்.
தற்போதைய வெப்பமான காலநிலையால் தீச்சம்பவங்கள் அதிகரிக்கும் அபாயம் உள்ளதால், மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (JBPM) தங்களின் தயார்நிலையை அதிகரிக்க வேண்டும் என மாமன்னர் கூறினார்.
இந்த வெப்பமான காலகட்டத்தில் ஏற்படக்கூடிய எந்தவொரு சாத்தியக்கூறுகளையும் எதிர்கொள்ள எப்போதும் தயார் நிலையில் இருக்கும் மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, மலேசிய தற்காப்புப் படை மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு மற்றும் மீட்பு நிறுவனங்களுக்கும் மாமன்னர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.
வறண்ட வளிமண்டல சூழல் மற்றும் குறைந்த மழைப்பொழிவின் காரணமாக, நாட்டில் தற்போது நிலவும் வெப்ப வானிலை, ஜூன் மாதம் தென்மேற்குப் பருவமழை தொடங்கும் வரை நீடிக்கும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) கணித்துள்ளது.
-- பெர்னாமா
கடும் வெயில்: மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு மாமன்னர் அறிவுறுத்தல்
26 மார்ச் 2026, 9:06 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
antarabangsa
கடுமையான வெப்ப அலை காரணமாக பிரிட்டனில் 2,877 பேர் உயிரிழப்பு
Shalini Rajamogun
31 ஜூலை 2026

antarabangsa
சியோலில் வெப்ப அலை தாக்கம்; கோடையில் இரண்டாவது எச்சரிக்கை விடுக்கப்பட்டது
Shalini Rajamogun
29 ஜூலை 2026

antarabangsa
ஜப்பானில் 40 டிகிரி செல்சியஸைத் தாண்டும் வெப்பநிலை
Shalini Rajamogun
22 ஜூலை 2026

national
சூப்பர் எல் நினோ அபாயம்: முன்கூட்டியே தயாராக பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்
Shalini Rajamogun
19 ஜூலை 2026

வகைnational
உங்கள் கருத்து என்ன?




