போரை நிறுத்துவதே பெட்ரோல் விலை உயர்விற்குத் தீர்வு

26 மார்ச் 2026, 3:22 AM
போரை நிறுத்துவதே பெட்ரோல் விலை உயர்விற்குத் தீர்வு

பெர்லின், மார்ச் 26 - அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதே உலகளாவிய எரிபொருள் விலை உயர்விற்கு இருக்கும் ஒரே உண்மையான தீர்வு என்று ஜெர்மனி வேந்தர் ஃபிரெட்ரிக் மெர்ஸ் தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற அந்நாட்டு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் உரையாற்றிய அவர், போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பாதிப்புகள் குறித்துத் தனது கவலையை வெளிப்படுத்தினார்.

"ஒவ்வொரு முறை எரிபொருள் விலை உயரும்போதும், வரி குறைப்பு மூலமாகவோ அல்லது அரசாங்க நிதி ஒதுக்கீடு மூலமாகவோ அதனை ஈடுகட்ட முடியாது," என்று மெர்ஸ் எம்.பி.க்களிடம் திட்டவட்டமாகக் கூறினார்.

அனடோலு செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஈரானில் நிலவும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டு வருவதுதான் விலையைக் கட்டுக்குள் வைப்பதற்கான சிறந்த வழி என்றும், அதற்கான முயற்சிகளை ஜெர்மனி அரசு தீவிரமாக முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த விவகாரம் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உடன் அண்மையில் பலமுறை தொலைபேசியில் உரையாடியதாகக் குறிப்பிட்ட மெர்ஸ், இந்தப் போர் உலகப் பொருளாதாரத்திற்கு ஏற்படுத்தும் அபாயங்கள் குறித்து கவலையை அவரிடம் எடுத்துரைத்ததாகத் தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் பிற தலைவர்கள், ஐக்கிய ராச்சியம் மற்றும் நார்வே போன்ற நாடுகளுடன் இணைந்து, அமெரிக்காவையும் இஸ்ரேலையும் ஒரு இராஜதந்திரத் தீர்வை நோக்கி ஈர்க்கத் தங்களால் இயன்ற அனைத்தையும் செய்து வருவதாக அவர் கூறினார்.

இருப்பினும், இந்த மோதல்கள் முடிவுக்கு வர வேண்டுமானால் ஈரான் உட்பட அனைத்துத் தரப்பினரும் இணக்கமான முடிவுகளை எடுக்கத் தயாராக இருக்க வேண்டும் என்றும், ஆனால் தற்போதைய சூழலில் அத்தகைய அறிகுறிகள் தென்படவில்லை என்பதையும் அவர் வருத்தத்துடன் ஒப்புக்கொண்டார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.