RON95 மானிய விலை லிட்டருக்கு RM1.99 ஆக நீடிக்கிறது

26 மார்ச் 2026, 1:29 AM
RON95 மானிய விலை லிட்டருக்கு RM1.99 ஆக நீடிக்கிறது

ஷா ஆலம், மார்ச் 26 - உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வரும் நிலையிலும், உள்நாட்டு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, RON95 பெட்ரோல் விலையை லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 சென் என்ற மானிய விலையிலேயே தக்கவைக்க மத்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றங்கள் காரணமாக, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 40 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்து, ஒரு பீப்பாய் 100 அமெரிக்க டாலரைத் தாண்டியுள்ளது. இத்தகைய சவாலான சூழலிலும், 'பூடி 95' (BUDI95) திட்டத்தின் கீழ் மக்கள் தொடர்ந்து மானிய விலையில் பெட்ரோலைப் பெறுவதை நிதி அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

இருப்பினும், மானியமற்ற எரிபொருட்களின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இன்று மார்ச் 26 முதல் ஏப்ரல் 1-ஆம் தேதி வரை, RON97 பெட்ரோல் விலை 60 சென் உயர்த்தப்பட்டு, ஒரு லிட்டர் 5 ரிங்கிட் 15 சென் என விற்பனை செய்யப்படும். அதே வேளையில், தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை 80 சென் உயர்ந்து லிட்டருக்கு 5 ரிங்கிட் 52 சென்னாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆனால், சபா, சரவாக் மற்றும் லாபுவான் பகுதிகளில் டீசல் விலை மாற்றமின்றி 2 ரிங்கிட் 15 சென்னாகவே நீடிக்கிறது. மேலும், மானியமற்ற RON95 பெட்ரோலின் விலை 60 சென் உயர்ந்து 3 ரிங்கிட் 87 சென்னாக அதிகரித்துள்ளது.

மலேசியா ஓர் எண்ணெய் உற்பத்தி நாடாக இருந்தபோதிலும், நாட்டின் தேவைக்கான ஒரு பகுதி சர்வதேசச் சந்தையிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதால், உலகளாவிய விலை ஏற்றத்தாழ்வுகள் உள்நாட்டிலும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக நிதி அமைச்சு விளக்கம் அளித்துள்ளது.

'மடாணி' பொருளாதாரக் கொள்கையின் அடிப்படையில், எரிபொருள் விலை உயர்வால் மக்களுக்கு ஏற்படும் சுமையைக் குறைக்க அரசாங்கம் மாதந்தோறும் 3 பில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிகமான மானியத்தைச் செலவிட்டு வருகிறது.

மானியங்கள் முறைகேடாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கவும், குறிப்பாக எல்லைப் பகுதிகளில் கடத்தப்படுவதைக் கட்டுப்படுத்தவும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வெளிநாட்டுப் பதிவு எண்களைக் கொண்ட வாகனங்களுக்கு RON95 பெட்ரோல் விற்பனை செய்ய விதிக்கப்பட்ட தடை தொடர்வதோடு, சிறப்பு அனுமதி இன்றி கொள்கலன்களில் 20 லிட்டருக்கு மேல் எரிபொருள் வாங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் சபா மற்றும் சரவாக் பகுதிகளில் டீசல் விற்பனையைக் கட்டுப்படுத்த புதிய நடைமுறைகளை அறிமுகப்படுத்தவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இறுதியாக, தகுதியுள்ள தனிநபர்களுக்கான நிதி உதவியும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 'பூடி தனிநபர்' (BUDI Individu) மற்றும் 'பூடி அக்ரி-கொமோடிட்டி' (BUDI Agri-Komoditi) திட்டங்களின் கீழ் வழங்கப்பட்டு வந்த மாத உதவித்தொகை 200 ரிங்கிட்டிலிருந்து 300 ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டுள்ளது.

பொதுப் போக்குவரத்து மற்றும் சரக்கு போக்குவரத்துத் துறையினருக்கு டீசல் தொடர்ந்து 2 ரிங்கிட் 15 சென்னாக வழங்கப்படுவதை அரசாங்கம் உறுதி செய்துள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.