அம்பாங் ஜெயா, மார்ச் 25 - அம்பாங் ஜெயா நகராண்மை கழகத்தின் (எம்பிஏஜே) எல்லைக்குட்பட்ட பண்டான் இண்டா மற்றும் தாமான் பெர்மாத்தா பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், நிர்ணயிக்கப்பட்ட சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றத் தவறிய இரண்டு உணவு வளாகங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் தூய்மையை உறுதி செய்யும் நோக்கில், அம்பாங் ஜெயா நகராண்மை கழகத்தின் நகரச் சேவை மற்றும் சுகாதாரத் துறை மேற்கொண்ட வழக்கமான ஆய்வின் போது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சம்பந்தப்பட்ட உணவு வளாகங்களில் பல்வேறு சுகாதார விதிமீறல்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து இந்த அமலாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அம்பாங் ஜெயா நகராண்மை கழகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ முகநூல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பொது இடங்களில் அசுத்தமான கழிவுநீரைக் கொட்டிய குற்றத்திற்காக, நகராண்மை கழக விதி 19(1)(d)-இன் கீழ் ஒரு வளாகத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டது.
மற்றொரு சோதனையில், உணவக வளாகத்தில் எலிகள், ஈக்கள் மற்றும் பூச்சிகள் போன்ற நோய் பரப்பும் உயிரினங்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தத் தவறியதற்காக, விதி 34(2)-இன் கீழ் இன்னுமொரு அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த நடவடிக்கைகள் அனைத்தும் 2007-ஆம் ஆண்டு அம்பாங் ஜெயா நகராண்மை கழகத்தின் உணவு வளாகங்கள் மற்றும் உணவு கையாளுதல் தொடர்பான விதிமுறைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
உணவகங்களின் தூய்மை நிலையைத் திருப்திகரமான அளவில் பராமரிப்பதை உறுதி செய்ய, இதுபோன்ற அதிரடிச் சோதனைகள் வரும் காலங்களில் மேலும் தீவிரப்படுத்தப்படும் என்று எம்பிஏஜே எச்சரிக்கை விடுத்துள்ளது.








