ஷா ஆலம், மார்ச் 20 – ஹரிராயா ஐடில்பித்ரி பெருநாளை முன்னிட்டு, லெமாங், கெதுப்பாட் மற்றும் பட்டாசு விற்பனை செய்யும் தற்காலிக உரிமம் பெற்ற வியாபாரிகளுக்கு அம்பாங் ஜெயா நகராண்மை கழகம் (எம்பிஏஜே) கடுமையான புதிய நிபந்தனைகளை விதித்துள்ளது.
இது குறித்து அந்த நகராட்சி தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த புதிய விதிமுறைகள் மார்ச் 17 முதல் மார்ச் 23-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் எனத் தெரிவித்துள்ளது. குறிப்பாக, பெருநாள் காலங்களில் விற்பனை நிலையங்களுக்கு அருகில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதிய நிபந்தனைகளின்படி, அனைத்து வியாபாரிகளும் தங்களது விற்பனை நிலையங்களுக்கு அருகில் போக்குவரத்தைச் சீர்செய்ய மக்கள் தன்னார்வப் படை (RELA) உறுப்பினர்களையோ அல்லது பாதுகாப்புப் பணியாளர்களையோ கட்டாயமாக நியமிக்க வேண்டும்.
மேலும், பொருட்களை வாங்க வரும் வாடிக்கையாளர்கள் தங்களது வாகனங்களைச் சாலைகளில் நிறுத்தி மற்ற வாகனங்களின் போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்காத வண்ணம் வியாபாரிகள் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த உத்தரவுகளைப் பின்பற்றத் தவறும் அல்லது பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயல்படும் வியாபாரிகளின் விற்பனை நிலையங்கள் எவ்வித முன்னறிவிப்புமின்றி உடனடியாக மூடப்படும் என நகராண்மை கழகம் எச்சரித்துள்ளது.
அதே வேளையில், போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படும் வாய்ப்புள்ள எம்.ஆர்.ஆர்.2 (MRR2) சாலை, அம்பாங் சாலை மற்றும் கோலாம் ஆயர் லாமா சாலை ஆகிய முக்கிய வழித்தடங்களில் கண்காணிப்புப் பணிகள் பலப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான கூடுதல் விவரங்கள் அல்லது சந்தேகங்களுக்குப் பொதுமக்கள், அம்பாங் ஜெயா நகராண்மை கழகத்தின் உரிமம் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் துறையை 03-4285 7344 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.








