மலேசியர்களின் மகிழ்ச்சி குறியீடு 81 சதவீதமாக உயர்வு: ஆய்வு தகவல்

20 மார்ச் 2026, 5:13 AM
மலேசியர்களின் மகிழ்ச்சி குறியீடு 81 சதவீதமாக உயர்வு: ஆய்வு தகவல்

கோலாலம்பூர், மார்ச் 20 – உலகளாவிய ரீதியில் பல்வேறு நிச்சயமற்ற சூழல்கள் நிலவி வந்தபோதிலும், மலேசியர்களிடையே நேர்மறையான எண்ணங்களும் மகிழ்ச்சியும் அதிகரித்துள்ளது அண்மைய ஆய்வில் தெரியவந்துள்ளது. இப்சோஸ் (Ipsos) சந்தை ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட 2026-ஆம் ஆண்டிற்கான மகிழ்ச்சி குறியீட்டில், மலேசியாவின் தரம் 81 சதவீதமாக உயர்ந்துள்ளது.

கடந்த 2025-ஆம் ஆண்டில் 76 சதவீதமாக இருந்த இந்த குறியீடு, தற்போது ஐந்து சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வளர்ச்சியின் மூலம் உலகளவில் மகிழ்ச்சியான நாடுகளின் வரிசையில் மலேசியா முன்னிலை வகிக்கிறது.

மலேசியர்களிடையே காணப்படும் வலுவான சமூக பிணைப்புகள் மற்றும் ஒருவரை ஒருவர் மதிக்கும் பண்பு ஆகியவையே இந்த மகிழ்ச்சிக்கு முக்கிய காரணங்களாக விளங்குவதாக இப்சோஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து கருத்துரைத்த இப்சோஸ் மலேசியாவின் மேலாண் இயக்குநர் அருண் மேனன், மலேசியர்கள் தங்களது ஒட்டுமொத்த நல்வாழ்விற்கு அர்த்தமுள்ள சமூகத் தொடர்புகளையே முதன்மையாகக் கருதுவதாகக் குறிப்பிட்டார்.

"மற்றவர்களால் நேசிக்கப்படுவதாகவும், மதிக்கப்படுவதாகவும் உணர்வதே மகிழ்ச்சிக்கான மிகப்பெரிய காரணியாக உருவெடுத்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக குடும்பம் மற்றும் குழந்தைகளுடனான உறவுமுறை முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு சமூகமாக இணைந்து வாழ்வதும், தங்களுக்கு என்று ஒரு பிணைப்பு இருப்பதும் மலேசியர்களின் மனநிறைவை மேம்படுத்துகிறது," என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், இந்த ஆய்வில் சில கவலைக்குரிய தகவல்களும் வெளியாகியுள்ளன. உலக நாடுகளைப் போலவே மலேசியாவிலும் தனிநபர் நிதி நெருக்கடியே மகிழ்ச்சியின்மைக்கு முதன்மைக் காரணியாக உள்ளது. அத்தோடு, வீட்டு வசதி மற்றும் வேலை தொடர்பான பிரச்சனைகள் உள்ளூர் அளவில் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் முக்கிய காரணிகளாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

வருமான அளவும் மகிழ்ச்சியைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதிக வருமானம் ஈட்டும் மலேசியர்களில் 87 சதவீதம் பேர் தாங்கள் மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். இது நடுத்தர மற்றும் குறைந்த வருமானப் பிரிவினருடன் ஒப்பிடுகையில் மிக அதிகமாகும்.

நிதி சார்ந்த அழுத்தங்கள் ஒருபுறம் இருந்தாலும், மலேசியர்களின் வலுவான சமூக வலைப்பின்னல்கள் மற்றும் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்கும் உறவுகள், சவால்களைத் தாங்கும் சக்தியை அவர்களுக்கு வழங்குவதாக அருண் மேனன் சுட்டிக்காட்டினார்.

இந்த ஆய்வானது 2025 டிசம்பர் 24 முதல் 2026 ஜனவரி 9 வரை நடத்தப்பட்டது. 18 முதல் 74 வயதுக்குட்பட்ட 501 மலேசியர்கள் இதில் பங்கேற்றனர். உலகளவில் 23,000-க்கும் மேற்பட்டோரிடம் நடத்தப்பட்ட விரிவான ஆய்வின் ஒரு பகுதியாக மலேசியாவிலும் இந்தத் தரவுகள் சேகரிக்கப்பட்டன.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.