உலு லங்காட், ஏப்ரல் 6 – காஜாங் தொகுதி மக்களின் குறைகளை மிகவும் நெருக்கமாகவும் பயனுள்ள முறையிலும் கேட்டறியும் நோக்கில், ஐந்து கிராமங்களில் சிறிய அளவிலான ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்புகளை நடத்த காஜாங் சட்டமன்ற உறுப்பினர் டேவிட் சியோங் முன்முயற்சி எடுத்துள்ளார்.
இந்தத் திட்டம் காஜாங் சட்டமன்றத் தொகுதியின் கிராம வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு குழுவின் (JPKK) ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேற்று கம்போங் பத்து 13 ஜேபிகேகே சமூக நலக்கூடத்தில் நடைபெற்ற முதலாவது திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்வில் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட உள்ளூர் மக்கள் கலந்து கொண்டனர். வருகை புரிந்த மக்களுக்கு நாசி மின்யாக், மீ காரி, பலகாரங்கள் மற்றும் பானங்கள் எனப் பலதரப்பட்ட உணவுகள் பரிமாறப்பட்டன.
இந்த அணுகுமுறை குறித்து கருத்துரைத்த டேவிட் சியோங், பெரிய அளவிலான ஒரு மைய நிகழ்வை நடத்துவதை விட, சிறிய அளவில் கிராமங்களுக்குச் சென்று இத்தகைய நிகழ்வுகளை நடத்துவது மக்களுடன் அமர்ந்து உரையாடவும், அவர்களின் தேவைகளை நேரடியாக அறிந்து கொள்ளவும் வாய்ப்பாக அமைகிறது என்று தெரிவித்தார்.
மக்களின் புகார்களைச் செவிமடுக்கவும், அவற்றுக்கு உடனடித் தீர்வுகளை வழங்கவும் இந்த நெருக்கமான சந்திப்பு முறை மிகவும் எளிதாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இந்தத் தொடர் நிகழ்வானது மேலும் நான்கு இடங்களில் நடைபெறவுள்ளது. அதன்படி, எதிர்வரும் ஏப்ரல் 11-ஆம் தேதி கம்போங் சுங்கை ஜெர்னி சுருவிலும், ஏப்ரல் 12-ஆம் தேதி கம்போங் சுங்கை செகாமட் மக்கள் மண்டபத்திலும் நடைபெறவுள்ளது.
அதனைத் தொடர்ந்து, ஏப்ரல் 18-ஆம் தேதி கம்போங் சுங்கை காந்தான் சமூக மையத்திலும், ஏப்ரல் 19-ஆம் தேதி புக்கிட் டுக்குங் ஜேபிகேகே சமூக நலக்கூடத்திலும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை இந்த உபசரிப்புகள் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு நிகழ்விலும் சுமார் 1,000 குடியிருப்பாளர்கள் வரை கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.









