தாய்லாந்தில் எரிபொருள் தட்டுப்பாடு: பயணங்களைத் தற்காலிகமாக ஒத்திவைக்க மலேசியப் பயணிகளுக்கு அறிவுறுத்தல்

18 மார்ச் 2026, 8:29 AM
தாய்லாந்தில் எரிபொருள் தட்டுப்பாடு: பயணங்களைத் தற்காலிகமாக ஒத்திவைக்க மலேசியப் பயணிகளுக்கு அறிவுறுத்தல்

ஷா ஆலம், மார்ச் 18 – தாய்லாந்து நாட்டில் கடந்த இரண்டு நாட்களாக நிலவி வரும் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு, மலேசியர்கள் அந்நாட்டிற்கான பயணங்களைத் தற்காலிகமாக ஒத்திவைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஹரிராயா விடுமுறை காலத்தில் தெற்கு தாய்லாந்திற்குச் செல்லத் திட்டமிட்டிருப்பவர்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகப் பெர்னாமா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹாட் யாய் (Hat Yai) மற்றும் சோங்க்லா போன்ற பிரபலமான சுற்றுலாத் தலங்களுக்கு வாகனங்களில் செல்லத் திட்டமிட்டுள்ள மலேசியர்கள், அவசரத் தேவைகள் இல்லையெனில் தங்களது பயணத்தைத் தள்ளிப்போடுவது நல்லது என சோங்க்லாவில் உள்ள மலேசியத் தலைமை தூதர் அஹ்மட் ஃபஹ்மி அஹ்மட் சர்க்காவி கேட்டுக்கொண்டார்.

"மிகவும் அத்தியாவசியமான காரணங்கள் இருந்தால் ஒழிய, இப்போதைக்குத் தாய்லாந்து செல்வதைத் தவிர்க்கவும். தவிர்க்க முடியாத சூழலில் அங்கு செல்ல நேர்ந்தால், பயணத்தைத் திட்டமிடும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்," என அவர் வலியுறுத்தினார்.

தற்போதைய நிலவரப்படி, இந்த எரிபொருள் சிக்கலால் மலேசியர்கள் யாரும் அங்கு சிக்கிக்கொண்டதாகத் தகவல்கள் இல்லை. இந்தத் தட்டுப்பாடு உண்மையான எரிபொருள் பற்றாக்குறையினால் ஏற்படவில்லை என்றும், மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றமான சூழலால் தாய்லாந்து மக்களிடையே ஏற்பட்ட 'பீதி கொள்முதல்' காரணமாகவே எரிபொருள் நிலையங்களில் தட்டுப்பாடு நிலவுவதாகவும் அவர் விளக்கமளித்தார்.

இதனால் தெற்கு தாய்லாந்து உட்பட பல பகுதிகளில் உள்ள எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்படுவதோடு, பல நிலையங்களில் இருப்பு தீர்ந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

சூழ்நிலையைச் சமாளிக்க தாய்லாந்து எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். அதன்படி, ஒரு வாகனத்திற்கு 500 பாட் (Baht) வரையிலும், மோட்டார் சைக்கிள்களுக்கு 80 பாட் வரையிலும் மட்டுமே எரிபொருள் நிரப்ப அனுமதிக்கப்படுகிறது.

தாய்லாந்து அரசாங்கம் உள்நாட்டுத் தேவைக்குப் போதுமான எரிபொருள் இருப்பு உள்ளதாக உறுதியளித்திருந்தாலும், நிலைமை சீராகும் வரை பொறுமை காக்குமாறு மலேசியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இதற்கிடையில், தாய்-ஆசியான் ஹலால் சுற்றுலாத் துறை சங்கத்தின் (TAHTA) தலைவர் ஆய்தா ஊஜே கூறுகையில், மார்ச் 16 முதல் சுமார் 10 நாட்களுக்கு இந்த விநியோகத் தடங்கல் நீடிக்கக்கூடும் என தாய்லாந்து அரசு அறிவித்துள்ளதாகத் தெரிவித்தார்.

ஒருவேளை தாய்லாந்து எல்லைக்குள் நுழைய வேண்டிய கட்டாயம் இருந்தால், எல்லையைக் கடக்கும் முன்பே வாகனத்தின் எரிபொருள் கலனை (Tank) முழுமையாக நிரப்பிக் கொள்ளுமாறு அல்லது தாய்லாந்து எரிபொருள் நிலையங்களில் அதிகாலை வேளையிலேயே எரிபொருளைப் பெற்றுக் கொள்ளுமாறு பயணிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.