ஷா ஆலம், மார்ச் 18 - சிலாங்கூர் மாநிலத்தின் தாவாஸ் (TAWAS) எனப்படும் சிலாங்கூர் குழந்தைகள் மரபுரிமை நிதியத்தில் உறுப்பினர்களாக இருக்கும் 2008-ஆம் ஆண்டு பிறந்த பிள்ளைகளின் தகவல்களை உடனடியாகப் புதுப்பிக்குமாறு யாவாஸ் வலியுறுத்தியுள்ளது.
இதுவரை புள்ளிவிவரங்களின்படி, 2008-ஆம் ஆண்டில் பிறந்த மொத்தம் 18,901 பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்களில், இதுவரை 3,188 பேர் மட்டுமே தங்களது விவரங்களைப் புதுப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய உறுப்பினர்கள் 18 வயதை எட்டும்போது, அவர்களுக்குரிய சேமிப்புத் தொகையை எவ்விதத் தடங்கலும் இன்றி வழங்குவதை உறுதி செய்யவே இந்தத் தகவல் புதுப்பிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
எனவே, பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் தங்களின் தற்போதைய தொலைபேசி எண், வீட்டு முகவரி மற்றும் மின்னஞ்சல் முகவரி போன்ற விவரங்களை விரைவாகப் புதுப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
2008-ஆம் ஆண்டு பிறந்தவர்களுக்கான இந்தச் சேமிப்புத் தொகை வழங்கும் பணிகள் இவ்வாண்டு முதல் 2027-ஆம் ஆண்டு வரை நடைபெறவுள்ளது.
கடந்த ஜனவரி 21-ஆம் தேதி முதல் இந்தத் தகவல் புதுப்பிப்புப் முறை இன்னும் திறந்த நிலையில் உள்ளது. ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் பயனாளர்கள் தவாஸ் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக அல்லது 03-5481 8800 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டோ விவரங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
அதேவேளையில், 2009-ஆம் ஆண்டு பிறந்த உறுப்பினர்களுக்கான தகவல் புதுப்பிப்பு நடவடிக்கைகள் இன்னும் தொடங்கப்படவில்லை என்றும், அது குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்றும் அறக்கட்டளை நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது.
தொழில்நுட்பச் சிக்கல்கள் அல்லது மேல் விவரங்கள் தேவைப்படுவோர், அதிகாரப்பூர்வ தகவல் ஊடகங்கள் அல்லது இணையதளத்தைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.








