ஷா ஆலம், மார்ச் 5 – குடியிருப்பு பகுதி ஒன்றில் பாதுகாப்பு சேவையை வழங்குவது தொடர்பாக இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட தகராறுதான் காப்பார் பகுதியில் உள்ள மேரு காவல் நிலையத்தில் ஏற்பட்ட சண்டைக்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
28 முதல் 41 வயதுக்குட்பட்ட சந்தேக நபர்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்கள் என்பதோடு, அவர்கள் ஒரு ரகசிய கும்பலுடன் (secret society) தொடர்புடையவர்கள் என்றும் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளதாகப் பெரித்தா ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய எட்டு பேர் மூன்று தனித்தனி நடவடிக்கைகளில் கைது செய்யப்பட்டதுடன், அவர்களுக்கு மார்ச் 6 மற்றும் 7 வரை தடுப்புக் காவல் விதிக்கப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநிலக் காவல்துறை தலைவர் டத்தோ ஷாசெலி கஹார் தெரிவித்தார்.
“விசாரணையில் சில சந்தேக நபர்களுக்கு முன்னதாகவே கொலை, கொலை முயற்சி, ஆயுதத்துடன் கொள்ளை, வீடு உடைத்து திருடுதல் மற்றும் சண்டை போன்ற குற்றப்பதிவுகள் இருப்பது கண்டறியப்பட்டது.
இந்த சண்டை நடந்தபோது சந்தேக நபர்கள் மதுபானம் அருந்திய நிலையில் இருந்ததுடன், அவர்களில் ஒருவர் போதைப்பொருள் உட்கொண்டிருந்ததும் உறுதிப்படுத்தப்பட்டது,” என ஷாசெலி விளக்கினார்.
சம்பவ இடத்தில் இருந்த இரு காவல்துறை அதிகாரிகளுக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
“இந்த கலவரத்தின் போது பயன்படுத்தப்பட்ட ஒரு ஹெல்மெட் மற்றும் இரும்புக் குழாய் ஆகியவற்றையும் நாங்கள் பறிமுதல் செய்துள்ளோம்,” என அவர் கூறினார்.
இந்த வழக்கு குற்றவியல் சட்டப் பிரிவுகள் (Penal Code) 148, 324 மற்றும் 427, 1967 காவல்துறைச் சட்டப்பிரிவு 90, மற்றும் 1958ஆம் ஆண்டு கொரோசிவ் மற்றும் வெடிப்பு பொருட்கள் மற்றும் ஆபத்தான ஆயுதங்கள் சட்டப்பிரிவு 6 ஆகியவற்றின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.








