'ஜோம் ஷோப்பிங் ஐடில்ஃபித்ரி' : 40,000-க்கும் மேற்பட்டோருக்கு வவுச்சர்கள் விநியோகம்

13 மார்ச் 2026, 10:19 AM
'ஜோம் ஷோப்பிங் ஐடில்ஃபித்ரி' : 40,000-க்கும் மேற்பட்டோருக்கு வவுச்சர்கள் விநியோகம்

ஷா ஆலம், மார்ச் 13: எதிர்வரும் ஹரிராயா ஐடில்ஃபித்ரி பெருநாளை முன்னிட்டு, சிலாங்கூர் மாநில மக்களின் நிதிச் சுமையைக் குறைக்க உதவும் நோக்கில், மாநில அரசு இவ்வாண்டுக்கான 'ஜோம் ஷோப்பிங் ஐடில்ஃபித்ரி' திட்டத்தை சிறப்பாக முன்னெடுத்துள்ளது.

இவ்வாண்டு இத்திட்டத்தின் கீழ் ஒட்டுமொத்தமாக 40,400 பேர் பயனடைவதை இலக்காகக் கொண்டுள்ளதாக, வறுமை ஒழிப்புத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பாராய்டு வீரமன் தெரிவித்தார்.

இதில் 38,400 பேர் மாநிலச் சட்டமன்றத் தொகுதிகள் வழியாகவும், 2,000 பேர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினரின் ஒதுக்கீட்டின் வழியாகவும் பயன்பெறவுள்ளனர்.

இந்தத் திட்டத்தை அமல்படுத்துவதற்காகச் சிலாங்கூர் மாநில அரசு 8.08 மில்லியன் மலேசிய ரிங்கிட்டை ஒட்டுமொத்த நிதியாக ஒதுக்கியுள்ளது. இந்த நிதி ஒதுக்கீடானது, மாநிலத்தின் அனைத்துத் தரப்பு மக்களின் நலனைப் பாதுகாப்பதில் சிலாங்கூர் அரசின் உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கிறது.

தற்போதைய நிலவரப்படி, மாநிலம் தழுவிய அளவில் வவுச்சர்கள் வழங்கும் பணி இன்னும் முழுமையடையவில்லை. இத்திட்டத்தின் காலக்கெடு வரும் மார்ச் 18-ஆம் தேதி வரை உள்ளதால், விநியோகப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இருப்பினும், மேரு, சுபாங் ஜெயா, பாலக்கோங், சிகிஞ்சான், செமினி, மோரிப், சுங்கை கண்டீஸ் உள்ளிட்ட 27 சட்டமன்றத் தொகுதிகள் தங்களுக்கு வழங்கப்பட்ட பணிகளை ஏற்கனவே வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளன.

நிதி ஒதுக்கீடு குறித்து விளக்கிய பாப்பாராய்டு வீரமன், "இவ்வாண்டுக்கான நிதி ஒதுக்கீடு இலக்கு வைக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்குப் போதுமானதாக உள்ளது. குறிப்பாக, மாநில அரசு கூடுதலாக வழங்கியுள்ள வவுச்சர்கள், தகுதியுள்ள ஒவ்வொருவருக்கும் உதவி கிடைப்பதை உறுதி செய்யும். இது மாநில அரசின் நிர்வாகத்தின் அனைவரையும் உள்ளடக்கிய கொள்கைக்குச் சான்றாகும்," எனத் தெரிவித்தார்.

மீதமுள்ள சட்டமன்றத் தொகுதிகளில் வவுச்சர்கள் வழங்கும் பணியை விரைந்து முடிக்குமாறு மாநில அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இதன் மூலம், பயனாளிகள் எவ்விதப் பதற்றமும் இன்றி முன்கூட்டியே தங்களின் பெருநாள் ஆயத்தப் பணிகளை மேற்கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.