அரசுத் துறையில் வீட்டிலிருந்தே பணியாற்றும் முறையைச் செயல்படுத்த பரிசீலனை

13 மார்ச் 2026, 2:23 AM
அரசுத் துறையில் வீட்டிலிருந்தே பணியாற்றும் முறையைச் செயல்படுத்த பரிசீலனை

புத்ராஜெயா, மார்ச் 12: மலேசியாவின் அரசுத் துறையில் 'வீட்டிலிருந்து வேலை செய்யும்' (WFH) முறையைச் செயல்படுத்துவது குறித்த சாத்தியக்கூறுகளை அரசாங்கம் விரிவாக ஆராய்ந்து வருவதாகத் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்துள்ளார். இது தொடர்பான முக்கிய முடிவுகள் அமைச்சரவையின் சிறப்புக்கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புத்ராஜெயாவில் நடைபெற்ற தொடர்பு அமைச்சின் மாதாந்திரக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவிட்-19 பெருந்தொற்றுக்குப் பிந்தைய காலத்தில் பல தனியார் நிறுவனங்கள் ஏற்கனவே 'ஹைப்ரிட்' (Hybrid) முறையிலான வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்து வருவதை அரசாங்கம் கவனித்து வருவதாகக் குறிப்பிட்டார்.

மேற்கு ஆசியாவில் நிலவி வரும் புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் எரிசக்தி பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில், தாய்லாந்து அரசு தனது அரசு நிறுவனங்களுக்கு 'வீட்டிலிருந்து வேலை' செய்யும் முறையை அமல்படுத்தியுள்ளது. இதனை முன்மாதிரியாகக் கொண்டு மலேசியாவிலும் அத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்படும் என அமைச்சர் கூறினார்.

"நாங்கள் முதலில் உலகப் பொருளாதாரச் சூழலைத் துல்லியமாக ஆராய வேண்டும். அடுத்த சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் தற்போதைய புள்ளிவிவரங்கள் மற்றும் அரசாங்கம் எடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும்," என்று அவர் மேலும் விளக்கமளித்தார்.

குறிப்பாக, ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை உயர்வு, விமான எரிபொருள் விலை மற்றும் இதர பொருளாதாரக் காரணிகளை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கத்தின் செலவினங்களைக் குறைப்பதற்கும், தேவையற்றச் செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்கும் இந்தச் சிறப்புக்கூட்டம் வழிவகுக்கும்.

அதே வேளையில், நாட்டின் பொருளாதார முதுகெலும்பாகத் திகழும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்துறையினருக்கு (MSME) அரசாங்கம் தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும், எந்தவொரு முடிவும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்காத வகையில் எடுக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார். தற்போது நாட்டில் RON95 பெட்ரோல் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு போதுமான அளவில் இருப்பதாகவும், பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

பிப்ரவரி 28-ஆம் தேதி தொடங்கிய மேற்கு ஆசியப் போர்ச் சூழல் மற்றும் ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்றமான நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, மலேசியா தனது பொருளாதாரப் பாதுகாப்பை உறுதி செய்ய இத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.