ஷா ஆலம், மார்ச் 12 – சிலாங்கூர் மாநிலத்தில் 'இகாசே' (eKasih) திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டிருந்த 5,058 குடும்பத் தலைவர்கள், கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதி நிலவரப்படி கடும் வறுமைப் பட்டியலிலிருந்து வெற்றிகரமாக வெளியேறியுள்ளனர்.
மாநில அரசின் தொடர்ச்சியான நலத்திட்டங்களும், மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த எடுக்கப்பட்ட தீவிர முயற்சிகளுமே இந்த முன்னேற்றத்திற்குக் காரணம் என சிலாங்கூர் மாநில அரசு தெரிவித்துள்ளது. நேற்று ஷா ஆலமில் நடைபெற்ற 'சிஜாத்ரா மடாணி நலத்திட்டம்: இக்காத்தான் காசிஹ் ரமலான் 1447' எனும் நிகழ்ச்சியைத் திறந்து வைத்து உரையாற்றிய சிலாங்கூர் மந்திரி புசாரின் அரசியல் செயலாளர் சைபுடின் ஷாபி முகமட் இத்தகவலை உறுதிப்படுத்தினார்.
ஒரு மாநிலத்தின் செழுமை என்பது வெறும் உட்கட்டமைப்பு வளர்ச்சியில் மட்டும் அடங்கியிருக்கவில்லை; மாறாக மக்களின் நலன்கள் எந்த அளவிற்குப் பாதுகாக்கப்படுகிறது என்பதில்தான் உண்மையான வெற்றி அடங்கியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், வறிய நிலையில் உள்ள குடும்பத் தலைவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இத்தகைய திட்டங்கள் தொடரும் என அவர் உறுதி அளித்தார்.
இந்த நிகழ்வில் ரமலான் மற்றும் எதிர்வரவிருக்கும் ஹரிராயா கொண்டாட்டங்களுக்கு உதவும் வகையில், 'இகாசே' திட்டத்தில் பதிவு செய்துள்ள 410 குடும்பத் தலைவர்களுக்குத் தலா 500 ரிங்கிட் ரொக்க உதவி வழங்கப்பட்டது. 'மலேசியா மடாணி' கொள்கையின் அடிப்படையில், மாநிலத்தில் எவரும் வளர்ச்சியிலிருந்தோ அல்லது சமூகப் பாதுகாப்புத் திட்டங்களிலிருந்தோ விடுபடக் கூடாது என்பதில் சிலாங்கூர் அரசு உறுதியாக இருப்பதை இந்த உதவித் திட்டம் பறைசாற்றுகிறது.
கல்வித் துறைக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த 200 இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கு 100,000 ரிங்கிட் மதிப்பிலான 'SSPN Prime' கல்விச் சேமிப்புத் திட்ட நிதியுதவியும் இந்த விழாவில் வழங்கப்பட்டது.
இந்த ஆரம்பகால நிதியுதவி, எதிர்காலத்தில் அறிவார்ந்த மற்றும் திறன்மிக்க தலைமுறையினரை உருவாக்கி நாட்டின் வளர்ச்சிக்குப் பெரும் பங்களிப்பை வழங்கும் என சைபுடின் ஷாபி நம்பிக்கை தெரிவித்தார்.








