காவல் துறையினரின் அதிரடி சோதனை: 3-வது மாடியிலிருந்து குதித்த சந்தேக நபர் மரணம்

12 மார்ச் 2026, 4:19 AM
காவல் துறையினரின் அதிரடி சோதனை: 3-வது மாடியிலிருந்து குதித்த சந்தேக நபர் மரணம்

ஷா ஆலம், மார்ச் 12 – கோம்பாக் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கு தொடர்பாகக் காவல்துறையினர் நடத்திய சோதனையின் போது, தப்பிக்க முயன்று மூன்றாவது மாடியிலிருந்து குதித்த 52 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்தார்.

இச்சம்பவம் நேற்று இரவு சுமார் 9.07 மணியளவில் நிகழ்ந்ததாகக் கோலாலம்பூர் தலைமைக் காவல்துறை அதிகாரி டத்தோ பாடில் மர்சூஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.

காவல் துறையினர் குறிப்பிட்ட குடியிருப்பிற்குள் அதிரடியாக நுழைந்தபோது, அங்கிருந்த இரு சந்தேக நபர்கள் பிடிபடுவதைத் தவிர்க்கும் நோக்கில் கட்டிடத்தின் மூன்றாவது மாடியிலிருந்து கீழே குதித்துள்ளனர்.

இதில் பலத்த காயமடைந்த 52 வயதுடைய உள்ளூர் ஆடவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் குதித்த மற்றொரு நபர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மரணம் குறித்து 'திடீர் மரணம்' (SDR) என வகைப்படுத்திக் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த அதிரடி சோதனையின் போது, அதே குடியிருப்பில் இருந்த நான்கு ஆண்கள், ஐந்து பெண்கள் மற்றும் மூன்று குழந்தைகள் என மொத்தம் 12 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 3 முதல் 42 வயதுக்குட்பட்ட இவர்களில் இருவர் இந்தோனேசியப் பிரஜைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், அந்த வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த திருடப்பட்ட இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சில போதைப்பொருட்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இச்சம்பவம் குறித்துப் பொதுமக்கள் தேவையற்ற ஊகங்களைச் சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டாம் என்றும், இது பொதுமக்களிடையே குழப்பத்தையும் தேவையற்ற அச்சத்தையும் ஏற்படுத்தும் என்றும் டத்தோ பாடில் மர்சூஸ் கேட்டுக்கொண்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேல் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.