சிலாங்கூரில் பிளாஸ்டிக் பை கட்டணத்தை உயர்த்த மாநில அரசு பரிசீலனை

12 மார்ச் 2026, 2:16 AM
சிலாங்கூரில் பிளாஸ்டிக் பை கட்டணத்தை உயர்த்த மாநில அரசு பரிசீலனை

ஷா ஆலம், மார்ச் 12 – கடந்த 2020ஆம் ஆண்டு முதல் சிலாங்கூர் மாநிலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பை கட்டண வசூல், இதுவரை 20 மில்லியன் ரிங்கிட்டைக் கடந்துள்ளதாக மாநில சுற்றுச்சூழல் துறை ஆட்சிக் குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் தெரிவித்தார். ஊடகவியலாளர்களுடனான நோன்புத் துறப்பு நிகழ்வின்போது அவர் இதனைப் பகிர்ந்துகொண்டார்.

இந்த வசூல் தொகையின் பெரும்பகுதி, பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைப்பதற்கான விழிப்புணர்வு பிரச்சாரங்களுக்கும், 'செல்-கித்தார்' (SELKitar) எனும் மறுசுழற்சி திட்டத்திற்கும் பயன்படுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டார். முதற்கட்டமாக 11 உள்ளூர் அதிகார வரம்புகளில் உள்ள சுமார் 400,000 வீடுகளில் இந்த மறுசுழற்சி திட்டம் முன்னோடித் திட்டமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் பொதுமக்களின் பங்களிப்பு மிக அவசியமானது. பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைப்பதன் மூலம் நிலையான மாற்றத்தை உருவாக்க முடியும் என்றும் அவர் வலியுறுத்தினார். பிளாஸ்டிக் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில், தற்போது நடைமுறையிலுள்ள 20 சென் கட்டணத்தை உயர்த்துவது குறித்து மாநில அரசு ஆலோசித்து வருவதாகவும் ஜமாலியா தெரிவித்தார்.

இதற்கான புதிய துணைச் சட்டங்கள் (By-laws) தற்போது வடிவமைக்கப்பட்டு வருவதோடு, விரைவில் மாநிலச் செயற்குழு கூட்டத்தில் (MMKN) இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். உதாரணமாக, பினாங்கு மாநிலத்தில் ஒரு பிளாஸ்டிக் பைக்கு 1 ரிங்கிட் முதல் 2 ரிங்கிட் வரை வசூலிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டிய அவர், சிலாங்கூரில் அறிமுகப்படுத்தப்படும் புதிய கட்டணம் மக்களுக்குச் சுமையாக அமையாமல் நியாயமான முறையில் இருக்கும் என உறுதியளித்தார்.

அரசின் நோக்கம் வசூலை அதிகரிப்பதல்ல, மாறாக மக்கள் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளைத் தவிர்ப்பதே ஆகும். "எதிர்காலத்தில் இந்த வசூல் தொகை குறைய வேண்டும் என்பதே எங்களின் எதிர்பார்ப்பு ஆகும். ஏனெனில் அப்போதுதான் மக்கள் பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டார்கள் என்பது உறுதியாகும்" என்று அவர் கூறினார்.

மேலும், குறிப்பிட்ட சில நாட்களில் வர்த்தக வளாகங்களில் பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்த முற்றிலும் தடை விதிக்கும் திட்டமும் பரிசீலனையில் உள்ளது. குறிப்பாக வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்தத் தடையை அமல்படுத்த வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இதற்கான சட்டத் திருத்தங்கள் எதிர்வரும் ஜூலை மாதத்திற்குள் நிறைவடையும் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.

இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளைக் கட்டுப்படுத்த பிரத்யேக துணைச் சட்டத்தைக் கொண்ட நாட்டின் முதல் மாநிலமாகச் சிலாங்கூர் திகழும் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.