ஷா ஆலம், மார்ச் 10 – கின்ராரா தொகுதியில் உள்ள குறைந்த வருமானம் பெறும் 700 குடும்பங்களுக்கு 'ஜோம் ஷோப்பிங் ஐடில்ஃபித்ரி' திட்டத்தின் கீழ் வவுச்சர்கள் வழங்கப்பட்டுள்ளன.
பெருநாளுக்கான முன் ஏற்பாடுகளை சிறப்பாகச் செய்வதற்கு ஏதுவாக இத்திட்டம் செயல்படுத்தப்படுவதாகக் கின்ராரா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் இங் ஸீ ஹான் தெரிவித்தார்.
மேலும், எம்பிஐ மூலம் 'மீண்டும் பள்ளிக்குத் திரும்புவோம்' திட்டத்தின் கீழ் 300 மாணவர்களுக்குப் பள்ளி உபகரண உதவிகளையும் அவர் வழங்கினார். குறிப்பாக, குழந்தைகளின் கல்விச் செலவுகளைச் சமாளிக்கச் சிரமப்படும் குடும்பங்களின் சுமையைக் குறைப்பதே இந்த உதவியின் முக்கிய நோக்கம் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த உதவிகள் பெருநாள் கொண்டாட்டங்களுக்குப் கூடுதல் மகிழ்ச்சி அளிப்பதோடு, மாணவர்கள் உற்சாகத்துடன் தங்களது கல்வியைத் தொடர ஊக்கமாக அமையும் என அவர் தனது முகநூல் பதிவில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதனிடையே, மாநில அளவிலான ஜோம் ஷோப்பிங்' திட்டம் குறித்துப் பேசிய வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பாராய்டு இந்த ஆண்டு சிலாங்கூர் முழுவதும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு மொத்தம் 38,400 வவுச்சர்கள் விநியோகிக்கப்படவுள்ளதாகத் தெரிவித்தார். இதற்காக மாநில அரசு சுமார் 7.68 மில்லியன் ரிங்கிட் நிதியை ஒதுக்கியுள்ளது.
மாநிலத்தின் 56 தொகுதிகளிலும் உள்ள இலக்குத் தரப்பினருக்கு இந்த வவுச்சர்கள் சென்றடைவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்கள் நெரிசலின்றிப் பெருநாள் பொருட்களை வாங்கி மகிழ ஏதுவாக, இந்த வவுச்சர்களைப் பயன்படுத்துவதற்கான காலக்கெடு எதிர்வரும் மார்ச் 20-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இதன் மூலம் இஸ்லாமிய மக்கள் தங்களது பண்டிகைக் காலச் ஷோப்பிங்கை திட்டமிட்டு செய்ய முடியும்.








