சபாக் பெர்ணம் ஓட்டப் பந்தயங்களுக்கு RM3 கட்டணம்: மாவட்ட மன்றம் விளக்கம்

10 மார்ச் 2026, 2:20 AM
சபாக் பெர்ணம் ஓட்டப் பந்தயங்களுக்கு RM3 கட்டணம்: மாவட்ட மன்றம் விளக்கம்

சபாக் பெர்ணம், மார்ச் 10- சபாக் பெர்ணம் மாவட்டத்தில் நடத்தப்படும் ஓட்டப் பந்தய நிகழ்வுகளின் நிர்வாகச் செலவுகள் மற்றும் பொது வசதிகளைப் பராமரிக்கும் நோக்கில், பங்கேற்பாளர்களிடமிருந்து 3 ரிங்கிட் கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை சபாக் பெர்ணம் மாவட்ட மன்றம் (MDSB) அதிகாரப்பூர்வமாகத் தெளிவுபடுத்தியுள்ளது.

இந்த குறைந்தபட்சக் கட்டணம் கடந்த ஆகஸ்ட் 2025 முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும், அரசாங்க முகமைகள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் உட்பட மாவட்டத்தில் போட்டிகளை நடத்தும் அனைத்து ஏற்பாட்டாளர்களுக்கும் இது பொருந்தும் என்றும் மன்றத்தின் தலைவர் அவாலுடின் ஜக்காரியா தெரிவித்தார்.

விளையாட்டு உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவும், குடிநீர் மற்றும் இதர தளவாடச் செலவுகளை ஈடுகட்டவும் இந்த நிதி பயன்படுத்தப்படுவதோடு, 1976-ஆம் ஆண்டு உள்ளூராட்சி சட்டத்தின் கீழ் இந்த வசூலிப்பு முறை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியான கூட்டங்களின் மூலம் விவாதிக்கப்பட்டு மாநில அளவிலும் அங்கீகாரம் பெற்ற இந்த நடவடிக்கை, அரசாங்க நிறுவனங்கள் தங்களின் சமூகத் திட்டங்களுக்காகக் கூடுதல் வருமான ஆதாரங்களை உருவாக்கிக் கொள்ளும் நிதி மேலாண்மை நடைமுறைகளுக்கு இணங்கவே செயல்படுத்தப்படுகிறது.

ஒரே நாளில் பல நிகழ்ச்சிகள் நடைபெறுவதைத் தவிர்க்கும் பொருட்டு, போட்டி ஏற்பாட்டாளர்கள் அனைவரும் தங்களின் தேதி மற்றும் நேரத்தை மாவட்ட மன்றத்தின் செயலகத்தில் முன்கூட்டியே பதிவு செய்து ஒருங்கிணைக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

மாவட்டத்தின் பொது வசதிகள் தடையின்றி கிடைப்பதையும், வருங்காலத்தில் இத்தகைய விளையாட்டு நிகழ்வுகள் தரமான முறையில் தொடர்ச்சியாக நடைபெறுவதையும் உறுதி செய்யவே இந்தச் சிறு கட்டணம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.