ஷா ஆலம், மார்ச் 9 - தெங்கு பெர்மைசூரி ஹாஜா நோராஷிகின் அவர்கள், நேற்று ஷா ஆலம் பிரிவு 13-இல் உள்ள ஸ்டேடியம் ரமலான் சந்தையில் நடைபெற்ற ‘சந்தூனி ரமலான் 2026’ (Santuni Bazar Ramadan) நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
தெங்கு பெர்மைசூரி அவர்களைப், பெக்காவானிஸ் (Pekawanis) அமைப்பின் தலைவர் டத்தின் ஸ்ரீ மஸ்தியானா முகமட் மற்றும் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் முகமட் நஜ்வான் ஹலிமி ஆகியோர் உற்சாகத்துடன் வரவேற்றனர்.
இந்தச் சந்திப்பின் போது, பெர்மைசூரி அவர்கள் ‘பிளாட்ஸ்’ (PLATS) எனும் சிலாங்கூர் தளத்தின் கீழ் இயங்கும் சிறு தொழில் முனைவோர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடி அவர்களுக்கு ஊக்கமளித்தார்.
அதனைத் தொடர்ந்து, மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்தின் (MCMC) சாவடிக்குச் சென்ற அவர், பாதுகாப்பான இணையப் பயன்பாட்டு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக வழங்கப்பட்ட சிறப்புத் தொகுப்பினைப் பெற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வின் முக்கிய அங்கமாக, ஷா ஆலம் ரமலான் சந்தை ஏற்பாட்டிற்கு ஆதரவளித்த நிதியுதவியாளர்கள் மற்றும் வியூகப் பங்காளிகளுக்குப் பெர்மைசூரி அவர்கள் பாராட்டுச் சான்றிதழ்களையும் காசோலைகளையும் வழங்கி கௌரவித்தார்.
தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்களுடனும் வியாபாரிகளுடனும் மிக நெருக்கமாக உரையாடிய அவர்கள், அனைவரின் நலன்களையும் அன்புடன் விசாரித்து மகிழ்ந்தார்.
மேலும், ரமலான் சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பல்வேறு வகையான நோன்புத் திறப்பு உணவுகளைப் பெர்மைசூரி அவர்கள் ஆர்வத்துடன் விலை கொடுத்து வாங்கினார்.
இறுதியாக, மாநிலத் தலைவியின் இந்த வருகையானது அங்குள்ள வணிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியதோடு, ரமலான் மாதத்தின் நல்லுறவைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்தது.








