கோலாலம்பூர், மார்ச் 9 -மலேசியாவின் பல்லின சமூகக் கட்டமைப்பைச் சிதைக்கும் வகையில், அரசியல் ஆதாயங்களுக்காக மதம் மற்றும் இன உணர்வுகளைத் தூண்டுவோருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை சமரசமின்றி பாயும் என்று அரசுத் தரப்பு மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
நாட்டின் அமைதியையும் ஒருமைப்பாட்டையும் சீர்குலைக்கும் வகையில் செயல்படும் எத்தரப்பினரும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது என்பது இந்த அறிவிப்பின் மூலம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது என்று தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் துணையமைச்சர் மாண்புமிகு ஆர். யுனேஸ்வரன் கூறினார்.
மலேசிய திருநாடு மதம், கலாச்சாரம் மற்றும் இன வேற்றுமைகளைக் கடந்த ஒருமித்த பண்பாட்டுத் தளத்தில் கட்டமைக்கப்பட்டதாகும். இதனைத் தனிப்பட்ட நலன்களுக்காகவோ அல்லது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காகவோ பயன்படுத்துவது நாட்டின் இறையாண்மைக்கு விடப்படும் சவாலாகவே பார்க்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் வெறுப்புணர்வைத் தூண்டுவது, மதங்களை இழிவுபடுத்துவது மற்றும் கலாச்சார ரீதியான சீண்டல்களைத் திட்டமிட்டு முன்னெடுப்பது போன்ற செயல்கள் ஆபத்தானவை என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இது போன்ற விஷமத்தனமான செயல்களில் ஈடுபடுவோரை 'நாட்டின் ஒருமைப்பாட்டின் எதிரிகள்' எனச் சாடியுள்ள அரசு, இத்தகையப் போக்குகள் மக்களிடையே நிலவும் நீண்டகால நல்லுறவைச் சிதைக்கக்கூடும் என ஆழ்ந்த கவலையை அவர் வெளிப்படுத்தினார்.
எனவே, இனவாதத் தீயைப் பரப்ப முயலும் தனிநபர்கள் அல்லது குழுக்கள் மீது எந்தவிதப் பாகுபாடுமின்றி அரச மலேசிய போலீஸ் படை (PDRM) மற்றும் சம்பந்தப்பட்ட அமலாக்கத் துறையினர் மிகக் கடுமையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர். யுனேஸ்வரன் கேட்டுக்கொண்டார்.
சமூக ஊடகங்கள் தற்போது வெறுப்புப் பேச்சுகளின் கூடாரமாக மாறிவருவதைக் குறிப்பிட்ட அரசு, போலி அடையாளங்கள் (Fake Accounts) மூலம் அவதூறுகளைப் பரப்புவோர் மீது தனி கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
இதற்காக மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (SKMM), தனது டிஜிட்டல் தடயவியல் (Digital Forensic) மற்றும் ஐபி முகவரி கண்காணிப்பு (IP Tracing) உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்டு, திரைமறைவில் இருந்து கொண்டு இனவாதத்தைத் தூண்டுவோரை அடையாளம் காண வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.
சமூக ஊடகங்கள் என்பது சட்டத்திற்கு அப்பாற்பட்ட தளம் அல்ல என்பதும், ஒவ்வொரு பயனரும் தாங்கள் பதிவிடும் கருத்துகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்பதும் இங்கு நினைவூட்டப்பட்டுள்ளது.
இறுதியாக, நாட்டின் அமைதி என்பது எந்தவொரு தீவிரப்போக்கு கொண்ட தனிமனிதரை விடவும் மேலானது என்று அரசாங்கம் உறுதிபடத் தெரிவித்துள்ளது.
கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் பிற மதங்களையோ அல்லது இனங்களையோ இழிவுபடுத்துவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று அவர் வலியுறுத்தினார்.







