கோலாலம்பூர், ஜன 12 - யூ.பி.எஸ்.ஆர் மற்றும் பி.டி 3 தேர்வுகளை மீண்டும் அமல்படுத்துவதற்கான கோரிக்கைகளை அரசாங்கத்திடம் முன்வைக்கவிருப்பதாக தேசிய ஒருமைப்பாட்டு துணை அமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ் தெரிவித்துள்ளார்.
யூ.பி.எஸ்.ஆர், பி.டி 3 தேர்வுகளை மீண்டும் அமலுக்கு வர வேண்டும் என்பது பெரும்பாலான பெற்றோர்களின் எதிர்பார்க்க உள்ளது. இதற்கிடையில், கல்வி அமைச்சு இவ்வாண்டு இந்த தேர்வுகளை மீண்டும் பரிசீலனை செய்வதாக அறிவித்துள்ளது.
"இது வேறும் கோரிக்கை மட்டுமல்ல, ஏனென்றால் தற்போது மாணவர்களில் அடைவுநிலைகள் குறைவதை நம்மால் பார்க்க முடிகின்ற நிலையில் மீண்டும் இந்த தேர்வுகளை அமல்படுத்துவது மிகவும் முக்கியம்."
யூ.பி.எஸ்.ஆர், பி.டி 3 தேர்வுகளை அமல்படுத்தப்படுவதற்கான தேவையை மதிப்பாய்வு செய்ய தேசிய கல்வி ஆலோசனை மன்றத்தை கல்வி அமைச்சு மீண்டும் செயல்படுத்தியிருப்பது தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.
இதனிடையே, கல்வி மற்றும் கலாச்சாரம் மூலமாக ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கான பரிந்துரைகளையும் கல்வி அமைச்சின் கவனத்திற்கு கொண்டுச் செல்லவிருப்பதாக யுனேஸ்வரன் கூறினார்.
கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸ் விவேகானந்தா தமிழ்ப்பள்ளியில் ஸ்ரீ முருகன் நிலையத்தின் ஏற்பாட்டிலான நிகழ்ச்சிக்குச் சிறப்பு வருகைப் புரிந்த போது செய்தியாளர்கள் சந்திப்பில் யுனேஸ்வரன் ராமராஜ் இத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
-பெர்னாமா


