பட்டர்வொர்த்: ஜாலான் தெலுக் ஆயர் தாவாரில் உள்ள கிணறு ஒன்றில் தவறி விழுந்த முதியவர் ஒருவர், இரண்டு நாட்களாக சிக்கித் தவித்த நிலையில், இன்று மாலை பொதுமக்களால் மீட்கப்பட்டார்.
இந்தச் சம்பவம் குறித்து இன்று மாலை 5.29 மணியளவில் அவசர அழைப்பு கிடைத்ததாக பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைப் பிரிவு துணை இயக்குனர் ஜோன் சகுன் பிரான்சிஸ் தெரிவித்தார்.
தகவலின் பேரில் பட்டர்வொர்த் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
"தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்தை அடைந்தபோது, வீடற்றவரான 63 வயதுடைய அந்த ஆடவர், சுமார் ஐந்து மீட்டர் ஆழமுள்ள கிணற்றிலிருந்து பொதுமக்களின் உதவியுடன் வெளியே கொண்டு வரப்பட்டிருந்தார்," என்று அவர் கூறினார்.
"இரண்டு நாட்களாகக் கிணற்றில் சிக்கியிருந்ததால், பாதிக்கப்பட்டவர் சிறு காயங்களுடன் மிகவும் சோர்வாகக் காணப்பட்டார். சுகாதார அமைச்சின் (KKM) பணியாளர்களால் அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக செபராங் ஜெயா மருத்துவமனைக்கு (HSJ) அனுப்பி வைக்கப்பட்டார்," என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டார்.
பாதிக்கப்பட்டவர் குளிக்க முயன்றபோது கிணற்றில் தவறி விழுந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக, அப்போது தண்ணீர் மார்பளவு மட்டுமே இருந்ததால் அவர் உயிர் பிழைத்துள்ளார்.
மீட்புப் பணிகள் மாலை 6.33 மணியளவில் முழுமையாக முடிவடைந்ததாக அவர் மேலும் கூறினார்.





