பொந்தியான், மார்ச் 7 – பூகம்ப அச்சுறுத்தல் உள்ள பகுதிகளில் கட்டப்படும் கட்டடங்களுக்கான கட்டுமான முறைகள் மற்றும் கட்டமைப்பு விவரக்குறிப்புகள் அந்தப் பேரிடரைத் தாங்கும் வகையில் இருக்க வேண்டும் என்பதால், அவற்றின் கட்டுமானச் செலவு அதிகரிக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.
மலேசிய நில அதிர்வு அபாய மண்டல வரைபடத்தில் உள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்படும் மேம்பாட்டுத் திட்டங்கள், கட்டடங்களின் கட்டமைப்புப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டுதல்களின்படி செயல்படுத்தப்பட வேண்டும் என்று பொதுப்பணித்துறை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மத் மஸ்லான் கூறினார்.
"கட்டடங்கள் பூகம்பத்தைத் தாங்கும் திறனைப் பெற்றிருப்பதை உறுதி செய்வதற்காக, அளவு, சிமெண்ட் மற்றும் இரும்பு விகிதம் போன்ற கட்டுமான முறைகளில் வேறுபாடுகள் இருப்பதால் இந்தச் செலவு அதிகரிக்கும்," என்று அவர் இன்று பெர்னாமாவிடம் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு சிகாமட் மாவட்டத்தில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களால், சிகாமட் மருத்துவமனையில் சிறிய விரிசல்கள் ஏற்பட்டதாக அஹ்மத் குறிப்பிட்டார்.
எனவே, கட்டடங்களைத் திட்டமிடும்போதும் கட்டும்போதும் பூகம்ப அபாயக் காரணியைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும், இதன் மூலம் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என்றும் அவர் கூறினார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 24 முதல் 30 வரை சிகாமட் மாவட்டத்தைத் தாக்கிய பலவீனமான நிலநடுக்கங்களைத் தொடர்ந்து, 15 அரசாங்கக் கட்டடங்களில் சிறிய சேதங்கள் ஏற்பட்டதாகவும், அவற்றைச் சரிசெய்வதற்கான செலவு ரிம550,000 என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் முன்னர் தெரிவித்திருந்தார்.
முன்னதாக பூகம்பம் இல்லாத மண்டலமாகக் கருதப்பட்ட ஜொகூர், கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை சிகாமட் மற்றும் பத்து பகாட் பகுதிகளில் தொடர்ச்சியான நில அதிர்வுகளை எதிர்கொண்டபோது நாட்டின் கவனத்தை ஈர்த்தது.
இதனிடையே, பொந்தியான் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர், பொந்தியான் மருத்துவமனையில் கட்டப்படவிருக்கும் புதிய கூடுதல் கட்டடம், பூகம்பத்தைத் தாங்கும் திறனைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்படும் என்றார்.
பொந்தியான் மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்படவில்லை என்றாலும், பேரிடர் காரணி மற்றும் அப்பகுதி கடலுக்கு அருகில் அமைந்திருப்பதாலும் கட்டுமானச் செலவு அதிகரித்துள்ளதாக அவர் கூறினார்.
ரிம400 மில்லியன் மதிப்புள்ள இந்த மருத்துவமனை கட்டுமானத் திட்டம், தற்போது அவசரப் பிரிவு, பிரதான மருத்துவமனை, வாகன நிறுத்துமிடம் மற்றும் பணியாளர் குடியிருப்பு என நான்கு முக்கியத் தொகுதிகளை உள்ளடக்கிய விரைவுக்கட்ட நிலையில் உள்ளது என்று அஹ்மத் மஸ்லான் முன்னதாக தெரிவித்திருந்தார்.
கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்த மருத்துவமனையின் புதிய கூடுதல் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவை நிறைவேற்றி வைத்தார்.
-- பெர்னாமா








